ADDED : ஜூன் 02, 2024 11:43 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு - வடசித்தூர் செல்லும் ரோட்டில், கொண்டம்பட்டி அருகே உள்ள வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு - வடசித்தூர் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டில் சமீபமாக, கனரக வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருவதால், அவ்வப்போது இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விழுகின்றனர்.
இதில், கொண்டம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோட்டில் வளைவு பகுதியில் விபத்து ஏற்படுகிறது.
இந்த வளைவுகளில் வாகனங்கள் தாறுமாறாகவும், அதிவேகமாகவும் பயணிப்பதால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, இந்த வளைவு பகுதியில் இரண்டு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'தனியார் கல்லூரி அருகே, ரோட்டில் இரண்டு வளைவுகள் உள்ளன. இவை இரண்டும் அபாயமாக உள்ளது. சில நேரங்களில் எதிரே வாகனங்கள் வரும்போது தடுமாறவும் வாய்ப்புள்ளது.
கடந்த, 10 நாட்களுக்கு முன் கனரக வாகனம் இங்கு திரும்பும் போது, எதிரே வேகமாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அந்த நபருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. எனவே, இங்கு வேகத்தடை கட்டாயம் அமைக்க வேண்டும்,' என்றனர்.