ADDED : ஜூன் 02, 2024 11:42 PM
ஆனைமலை;ஆனைமலை அருகே, ரோடு போட வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே, கோட்டூர் பேரூராட்சியில், ஏழாவது வார்டுக்கு உட்பட்ட ரெயின்போ கார்டனில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில், ரோடு போடவில்லை எனக்கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோட்டூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'சுயே., வேட்பாளர் வெற்றி பெற்ற ஏழாவது வார்டில், 120 மீட்டர் துாரத்துக்கு ரோடு போடாமல், பேரூராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர் வார்டில் மட்டும் ரோடு பணிகள் நடக்கின்றன.
இப்பகுதியிலும் ரோடு பணியை துவங்க கோரியும் நடவடிக்கை இல்லை. இதற்குரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
இதற்கு போலீசார், 'பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.