ADDED : ஜூன் 18, 2024 10:38 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பர்லியார் அருகே விழும் நிலையில் உள்ள மரங்களை, மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், பர்லியார் வழியாக ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும்.
பர்லியார் அருகே சாலையோரம் உள்ள சில மரங்களின் வேர் பகுதி வலுவிழுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
மழைக்கு முன்பாக இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பர்லியார் வழித்தடத்தில் போக்குவரத்து தடைபட்டால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்வோர் கோத்தகிரி சாலை வழியாக தான் செல்ல முடியும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். உடனடியாக ஆபத்தான மரங்களை கண்டறிந்து கனமழைக்கு முன்பாக அதனை அகற்ற வேண்டும்,'' என்றனர்
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ''மின்சாரத்துறை, வனத்துறை ஆகியோருடன் இணைந்து ஆபத்தான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படும். மழையினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன,'' என்றனர்.