Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலைப்பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

மலைப்பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

மலைப்பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

மலைப்பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

ADDED : ஜூன் 20, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி மலைவாழ் பகுதி பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில் ஐந்து மலைக்கிராம பள்ளிகள் உள்ளன. குருமலை, குழிப்பட்டி, தளிஞ்சி, கோடந்துார், மாவடப்பு உள்ளிட்ட ஐந்து மலைப்பகுதிகளிலும், அரசு துவக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன.

இதில் குருமலை மற்றும் குழிப்பட்டி பகுதி பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாததால் இரண்டு ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பள்ளியிலும், பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐந்து வயது நிறைவடைந்த நிலையில் உள்ளனர்.

ஆனால், பள்ளிகளில் வாரத்தில் பாதி நாட்கள் கூட வகுப்புகள் நடத்தப்படுவதில்லை எனவும், ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு செல்வதில்லை என கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டில் மீண்டும் பணியிடம் காலியானதால், அப்பள்ளிகளுக்கு பணிசெய்வதற்கு புதிய ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், நேற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் மனோகரன், சரவணகுமார், ஆறுமுகம் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

இந்த முகாமில் 15 பேர் பங்கேற்றனர். தகுதியுள்ள விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

கல்வியாளர்கள் கூறுகையில், 'தற்காலிக ஆசிரியர்களாக இருப்பினும், மலைவாழ் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கு சென்றுவர வேண்டும்.

ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு செல்வதையும், வகுப்புகள் நடப்பதையும் கல்வித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us