/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேருக்கு பாதுகாப்பு ஷெட்; பக்தர்கள் கோரிக்கை தேருக்கு பாதுகாப்பு ஷெட்; பக்தர்கள் கோரிக்கை
தேருக்கு பாதுகாப்பு ஷெட்; பக்தர்கள் கோரிக்கை
தேருக்கு பாதுகாப்பு ஷெட்; பக்தர்கள் கோரிக்கை
தேருக்கு பாதுகாப்பு ஷெட்; பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 11:18 PM

மேட்டுப்பாளையம்:நன்கொடையாளர்கள் வழங்கிய, 60 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக செய்த குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேருக்கு, பாதுகாப்பு ஷெட் போடாததால், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வருகிறது.
காரமடை அருகே குருந்தமலையில், பிரசித்தி பெற்ற பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தைப்பூச தேரோட்டத்திற்கு பயன்படுத்தி வந்த தேர், பழுதடைந்ததால், பக்தர்கள், பொதுமக்கள் வழங்கிய நன்கொடை வாயிலாக, 60 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக தேர் செய்யப்பட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஜனவரி மாதம் தைப்பூசத்தன்று, புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
பழைய தேர் இருந்த போது, அந்த தேருக்கு பாதுகாப்பு கவசமாக தகர ஷெட் போடப்பட்டிருந்தது. ஆனால், புதிய தேருக்கு பாதுகாப்பு ஷெட் போடாமல் உள்ளது. இந்நிலையில், புதிய தேருக்கு பாதுகாப்பு ஷெட் போட நன்கொடையாளர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தமிழக அரசு, இக்கோவிலுக்கு அறங்காவலர் குழுவை நியமனம் செய்தது.
கோவிலின் அனைத்து நிர்வாகத்தை, அறங்காவலர் குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். தேரோட்டம் நடைபெற்று ஐந்து மாதங்கள் ஆன பின்பும், தேருக்கு பாதுகாப்பு ஷெட் போடாததால், தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது.
இதைப் பார்த்த தேருக்கு நன்கொடை வழங்கிய சில பக்தர்கள், பிளாஸ்டிக் பேப்பரை வாங்கி வந்து, தேரை மூடி வைத்துள்ளனர்.
எனவே மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், உடனடியாக தேருக்கு பாதுகாப்பு ஷெட் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.