/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நான் வீட்டுக்கு போகணும்...விடுங்க!' 'நான் வீட்டுக்கு போகணும்...விடுங்க!'
'நான் வீட்டுக்கு போகணும்...விடுங்க!'
'நான் வீட்டுக்கு போகணும்...விடுங்க!'
'நான் வீட்டுக்கு போகணும்...விடுங்க!'
ADDED : ஜூன் 11, 2024 02:26 AM

கோடை விடுமுறை முடிந்து, கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள், புதிய சீருடை அணிந்து, கலர் கலரான புதிய புத்தகப்பை சுமந்தபடி உற்சாகத்துடன், பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர்.
முதல் முறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட சில குழந்தைகள், பெற்றோர் விரல்களை பிடித்தபடி குஷியாக வந்தனர்.
அவர்களுக்கு இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். சில பள்ளிகளில், சீனியர் மாணவ மாணவியர் மிக்கி மவுஸ் போல் வேடமணிந்து, முதல் வகுப்பு குழந்தைகளை வரவேற்றனர். ஒருசில தனியார் பள்ளிகளில், 'செல்பி பாயின்ட்' அமைத்து, குழந்தைகளுடன் ஆசிரியர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்வித்தனர்.
ஆனாலும், வகுப்பறையில் பெற்றோர் விட்டுச்சென்றதும், சில குழந்தைகள் அழுது அடம் பிடித்தன.
'நான் டாடீ கிட்ட போகணும் வுடுங்க', 'மம்மி உட்டுட்டு போயிட்டா...' என கண்ணீர் மல்க வகுப்பறை வாசலை பார்த்தபடி கதறினர். ஆசிரியர்கள் அவர்களை ரசித்தபடி, இனிப்பு வழங்கி ஆறுதல்படுத்தினர்.
கதறி அழும் குழந்தைகளை, பள்ளியில் விட்டு விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல், பெற்றோர் பலர், பள்ளிக்கு வெளியே நின்றிருந்தனர்.
தேர்ச்சி பெற்று, புதிய வகுப்புக்கு மாறியிருந்த மாணவர்கள், தங்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. காலை சிற்றுண்டியுடன், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.