/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'கும்டா'வை கைப்பற்ற மூன்று துறைகள் போட்டி: முதல்வர் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு 'கும்டா'வை கைப்பற்ற மூன்று துறைகள் போட்டி: முதல்வர் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
'கும்டா'வை கைப்பற்ற மூன்று துறைகள் போட்டி: முதல்வர் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
'கும்டா'வை கைப்பற்ற மூன்று துறைகள் போட்டி: முதல்வர் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
'கும்டா'வை கைப்பற்ற மூன்று துறைகள் போட்டி: முதல்வர் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
ADDED : செப் 01, 2025 01:07 AM
சென்னை:ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா'வை கைப்பற்ற, மூன்று துறைகளிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மாநகர பேருந்து ஆகிய பொது போக்குவரத்து சேவைகள் உள்ளன. இது மட்டுமின்றி, தனியார் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் போன்ற சேவைகளும் உள்ளன.
இந்த வசதிகளை மக்கள் பயன்படுத்துவதில், ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மாறுவதில், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில், கும்டா எனப்படும் போக்குவரத்து குழுமம், 2010ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் முடங்கி இருந்தது.
இந்நிலையில், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் போக்குவரத்து குழுமம் செயல்பட துவங்கியது.
முதல்வர் தலைமையில் செயல்படும் இந்த குழுமத்துக்கு, இரண்டாம் கட்ட அளவில் நிர்வாக அமைப்பை சரி செய்ய வேண்டும். உறுப்பினர் செயலர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான நியமனங்கள் சட்டப்படி, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, கும்டா தொடர்பான அரசாணைகள் அனைத்தும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையால் பிறப்பிக்கப்படுகின்றன.
வீட்டுவசதி துறையின் இணை செயலர், தற்போது இதன் உறுப்பினர் செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், கும்டா எந்த துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், மூன்று துறைகளுக்கிடையிலான போட்டியாக மாறி உள்ளது.
தற்போது, வீட்டுவசதி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கும்டாவை, சி.எம்.டி.ஏ.,வின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என, அதன் தலைவரான, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், போக்குவரத்து சார்ந்த திட்டங்கள் அதிகம் என்பதால், போக்குவரத்து துறையின் கீழ் கும்டா இருக்க வேண்டும் என்று அதன் செயலராக இருந்த பணீந்திரரெட்டி, அரசுக்கு பரிந்துரைத்தார்.
தற்போது, மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் செயல்படுகிறது. இதேபோன்று, போக்குவரத்து குழுமத்தை சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என, அதன் உயரதிகாரிகள், தலைமை செயலருக்கு பரிந்துரைத்துள்ளனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
போக்குவரத்து குழுமமான கும்டா எந்த துறையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதை, அதன் தலைவரான முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். நடைமுறை காரணங்கள் அடிப்படையில், பல்வேறு துறைகள் இதற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன. இந்த விஷயத்தில் முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.