/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு அலுவலகங்களாக மாறி வரும் சமூக நலக்கூடங்களால் மக்கள் தவிப்பு அரசு அலுவலகங்களாக மாறி வரும் சமூக நலக்கூடங்களால் மக்கள் தவிப்பு
அரசு அலுவலகங்களாக மாறி வரும் சமூக நலக்கூடங்களால் மக்கள் தவிப்பு
அரசு அலுவலகங்களாக மாறி வரும் சமூக நலக்கூடங்களால் மக்கள் தவிப்பு
அரசு அலுவலகங்களாக மாறி வரும் சமூக நலக்கூடங்களால் மக்கள் தவிப்பு
ADDED : செப் 02, 2025 02:22 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சமூக நலக்கூடங்கள் காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றமாக மாற்றப்பட்டு உள்ளதால், ஏழை, எளிய மக்கள், தங்கள் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் 105 சமூக நலக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் இந்த கூடங்கள், அரசு அலுவலகங்களாகவும், முறையான பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன.
திருப்போரூர் ஒன்றியம் காயாரில் உள்ள சமூக நலக்கூடத்தில் காவல் நிலையமும், நாவலுாரில் உள்ள சமூக நலக்கூடத்தில் சார் - பதிவாளர் அலுவலகமும், கண்ணகப்பட்டில் உள்ள சமூக நலக்கூடம், நீதிமன்றமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மதுராந்தகம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சி சமூக நலக்கூடத்தில் உளுந்துார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு காவல் படை, 10வது பட்டாலியனைச் சேர்ந்த 90 போலீசார், ஐந்து மாதங்களாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சமூக நலக்கூடங்கள் ஏழை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன. தவிர பல இடங்களில் சமூக நலக்கூடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
இதனால், தனியார் மண்டபங்களில், 50,000 ரூபாய் துவங்கி, பல லட்சம் வரை அதிக கட்டணம் கொடுத்து, விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவல நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் இருப்பதால், பல வழிகளில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப, சமுதாய நலக்கூடங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டி உள்ளது.
எனவே, மாற்று பயன்பாட்டில் உள்ள சமூக நலக்கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.