/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒரே நாளில் மனைகளாக மாறிய விவசாய நிலம் பத்திரப்பதிவு தில்லுமுல்லு குறித்து விசாரணை ஒரே நாளில் மனைகளாக மாறிய விவசாய நிலம் பத்திரப்பதிவு தில்லுமுல்லு குறித்து விசாரணை
ஒரே நாளில் மனைகளாக மாறிய விவசாய நிலம் பத்திரப்பதிவு தில்லுமுல்லு குறித்து விசாரணை
ஒரே நாளில் மனைகளாக மாறிய விவசாய நிலம் பத்திரப்பதிவு தில்லுமுல்லு குறித்து விசாரணை
ஒரே நாளில் மனைகளாக மாறிய விவசாய நிலம் பத்திரப்பதிவு தில்லுமுல்லு குறித்து விசாரணை
ADDED : ஜூன் 01, 2025 09:54 PM
சென்னை:புழல் ஏரியை ஒட்டிய பொத்துாரில், விவசாய நிலமாக பத்திரப்பதிவு செய்த இரண்டாவது நாளில், அதே நிலங்கள் வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்டது குறித்த புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் அரசியல் புள்ளிகள் துணையுடன் செயல்படும் நபர்கள், அங்கீகாரமில்லாத மனைகளை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை குறி வைத்து, இத்தகைய மோசடி நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
தற்போதைய நடைமுறைகளின்படி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் குறிப்பிட்ட நிலத்தை, தங்கள் பெயரில் பொது அதிகாரம் அல்லது கிரையம் பெற்ற பின், அதை வகைபாடு மாற்றம் மற்றும் மனைப்பிரிவு அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்குவர். இவ்வாறு அங்கீகாரம் பெற்ற பின் தான், தனி மனைகள் விற்பனை செய்ய வேண்டும்.
குறைந்தது 6 மாதம்
அப்போதும், மனையாக விற்பனையை பதிவு செய்யும் முன், அதற்கு வழிகாட்டி மதிப்பு தனியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் முடிய, குறைந்தது ஆறு மாதம் வரையாகும்.
ஆனால், இதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில், சில பத்திரப்பதிவுகள் தடாலடியாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அம்பத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சம்பத் என்பவர் கூறியதாவது:
செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், புழல் ஏரியை ஒட்டி பொத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட, 2.22 ஏக்கர் நிலம் தொடர்பாக, பொது அதிகார ஆவணம் மே 14ல் பதிவானது. விவசாய நிலம் என்ற அடிப்படையிலேயே, இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது.
ஆனால், மே 16ல் அதே சர்வே எண்ணுக்கு உட்பட்ட, 2.22 ஏக்கர் நிலம், வீட்டு மனைகளாக வெவ்வேறு நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 33 பேர் மீது, வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு நடந்துள்ளது.
மே 14ல், விவசாய வகைபாட்டில் இருந்த நிலம், மே 16ல் வீட்டு மனைகளாக மாறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரே நாளில் மனைப்பிரிவு அங்கீகாரம், வழிகாட்டி மதிப்பு நிர்ணய பணிகள் முடிந்ததா அல்லது போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து முழுமையான விசாரணை நடத்த பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளித்து இருக்கிறோம். இந்த குறிப்பிட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில், தொடர்ந்து அங்கீகாரமில்லாத மனைகள் பத்திரப்பதிவு நடப்பதை தடுக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.