Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி குளத்தை சுற்றி சமூக சோலை வரும் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றம்?

வேளச்சேரி குளத்தை சுற்றி சமூக சோலை வரும் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றம்?

வேளச்சேரி குளத்தை சுற்றி சமூக சோலை வரும் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றம்?

வேளச்சேரி குளத்தை சுற்றி சமூக சோலை வரும் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றம்?

ADDED : ஜூன் 01, 2025 09:55 PM


Google News
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 10 ஏக்கருக்கும் மேல் அரசு இடம் உள்ளது.

இதில், ஆக்கிரமிப்பில் இருந்த 3.50 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. அதில், 2024 நவம்பரில், 10 அடி ஆழத்தில் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இதில், 1.50 மில்லியன் கன அடி மழைநீர் சேமிக்கப்பட்டது.

இந்த குளங்கள் நிரம்பி, சதுப்பு நிலம் செல்லும் வகையில், குழாய் மற்றும் வடிகால்வாய் கட்டமைப்பு உள்ளது.

குளத்தை சுற்றி, 20 கோடி ரூபாயில், 'சமூக சோலை' பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதில், நடைபயிற்சி பாதை, மூங்கில் இருக்கைகள், பறவைகள் வந்து செல்ல வசதி, நீரூற்று, வண்ண மின்னொளி மற்றும் வேளச்சேரி - தரமணி ரயில் நிலையம் இடையே, 3.2 கி.மீ., சைக்கிள் பாதை அமைய உள்ளது.

இதற்கிடையில், நீர்வழித்தடத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு, கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என, வேளச்சேரி டான்சி நகர் நலச்சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், ஜூன் 12ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில், குளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, நீரோட்டத்திற்கு தடையாக இருந்த மண் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த இடம், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை தாலுகா எல்லையில் உள்ளது. வேளச்சேரி தாலுகா சர்வே எண்ணை போலியாக பயன்படுத்தி, பள்ளிக்கரணை தாலுகா அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பத்திரப்பதிவும், பட்டாவும் பெறப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி, ஏப்ரல் மாதத்தில், இரு தாலுகா பகுதிகளில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் அறிக்கை மற்றும் வரைபடம், சென்னை கலெக்டரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டரின் உத்தரவுக்காக, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

பருவமழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் சார்பில், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அதற்கு ஏற்ப, சென்னை கலெக்டர் உத்தரவு பிறப்பிப்பார் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் காத்திருக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us