/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீ விபத்து ஒத்திகையில் விபரீதம் தீயணைப்பு அலுவலருக்கு காயம் தீ விபத்து ஒத்திகையில் விபரீதம் தீயணைப்பு அலுவலருக்கு காயம்
தீ விபத்து ஒத்திகையில் விபரீதம் தீயணைப்பு அலுவலருக்கு காயம்
தீ விபத்து ஒத்திகையில் விபரீதம் தீயணைப்பு அலுவலருக்கு காயம்
தீ விபத்து ஒத்திகையில் விபரீதம் தீயணைப்பு அலுவலருக்கு காயம்
ADDED : செப் 13, 2025 02:06 AM

கொளத்துார், தீயணைப்பு துறையின் ஒத்திகை நிகழ்ச்சியில் நடந்த விபரீதத்தால், தீயணைப்பு துறை அலுவலர் உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டது.
தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவித காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தமிழக தீயணைப்புத் துறை சார்பில், நேற்று கொளத்துார் பெரியார் அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
மருத்துவமனை கட்டடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டால், அதை அணைப்பது மற்றும் அங்குள்ள நோயாளிகள் உள்ளிட்டோரை மீட்பது, காயமடைந்தோருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை செய்து காண்பிக்கப்பட்டன.
முன்னதாக, கட்டடத்தில் தீப்பற்றியதாக தகவல் வெளியானதும், தயாராக இருந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது, அதிக அழுத்தம் காரணமாக, தண்ணீர் பாய்ச்சும் குழாயின் வால்வு பீறிட்டதால், தண்ணீர் குழாய் கட்டுப்பாட்டை இழந்து நாலாபுறம் சுழன்றடித்தது.
உடனே சுதாரித்த தீயணைப்பு துறையினர், தண்ணீர் வால்வை மூடினர். ஆனால் அதற்குள், தீயணைப்புத் துறை அலுவலர் முருகேசனுக்கு தலையிலும், மருத்துவமனை பணியாளர் கோவிந்தம்மாளுக்கு காலிலும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு, உடனே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.
ஒத்திகையில் நடந்த திடீர் விபரீதம், மருத்துவமனை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, தீயணைப்பு துறையினருக்கே பாடமாக அமைந்தது. பின், தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை, அசம்பாவித நேரங்களில் தீயை எப்படி அணைக்க வேண்டும் என, செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.