/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கல்லுாரி மாணவியர் நிகழ்த்திய கண்காட்சியில் புதுப்புது ஆடை வடிவமைப்புகளுக்கு வரவேற்பு கல்லுாரி மாணவியர் நிகழ்த்திய கண்காட்சியில் புதுப்புது ஆடை வடிவமைப்புகளுக்கு வரவேற்பு
கல்லுாரி மாணவியர் நிகழ்த்திய கண்காட்சியில் புதுப்புது ஆடை வடிவமைப்புகளுக்கு வரவேற்பு
கல்லுாரி மாணவியர் நிகழ்த்திய கண்காட்சியில் புதுப்புது ஆடை வடிவமைப்புகளுக்கு வரவேற்பு
கல்லுாரி மாணவியர் நிகழ்த்திய கண்காட்சியில் புதுப்புது ஆடை வடிவமைப்புகளுக்கு வரவேற்பு
UPDATED : மார் 23, 2025 06:29 AM
ADDED : மார் 23, 2025 12:38 AM

அம்பத்துார்,சென்னை, அம்பத்துாரில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லுாரியில், 'ஐடியா தான் உலகை ஆளும்' என்பதை அடிப்படையாக கொண்ட, 'ஐடியா 25' என்ற வடிவமைப்புக் கண்காட்சியை, நேற்று நடத்தினர். இதில் மாணவ - மாணவியர், தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
நிகழ்ச்சியை, கல்லுாரியின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ராமநாதன், பிரபல வடிவமைப்பாளர் பலராம் உள்ளிட்டோர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில், குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது பயன்படுத்த உதவும், 'துாளி செய்' எனும் வடிவமைப்பை, மாணவி நிவேதா உருவாக்கியிருந்தார்.
அதேபோல், துணி வீணாகாதவாறு தைக்கப்பட்ட, மாணவி சுபஸ்ரீயின் ஆடைகள்; நடை மற்றும் இசைக்கு ஏற்ப நிறம் மாறும் உடையை தயாரித்த மாணவி அபிராமியின் படைப்பு; வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மாணவி ஸ்ரீ ஜெய் கவுரி உருவாக்கிய ஜிம்னாஸ்டிக் உடை உட்பட, பலரது படைப்புகள், ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
நிறுவனர் ராமநாதன் கூறியதாவது:
சென்னையில் முதல் முறையாக, வடிவமைப்பு கண்காட்சியை நடத்துகிறோம். பல புதுமை கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், தொழில் முனைவோராக மாறவும், இந்த கண்காட்சி பலருக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.
தொழில் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், திறமைசாலிகளுக்கு பெரும் தேவை இருக்கிறது. அப்படியான நாளைய உலகின் கட்டமைப்பாளர்களைச் செதுக்கும் வேலையை, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' செய்து வருகிறது.
அனைத்து துறையிலும் வடிவமைப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது. எந்த ஒரு பொருளோ அல்லது தொழிற்சாலையோ, அதன் வடிவமைப்பு சரியாக இருந்தால் தான் வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும். வடிவமைப்புக்கு என்றே ஒரு படிப்பு இருப்பதும் பலருக்கு தெரியவில்லை.
பொருளை உருவாக்கும் நிலையில் இருந்து, நாம் வெளியே வந்துவிட்டோம். மாறாக, மற்ற நாடுகளில் உருவாக்கிய தயாரிப்புக்கு, சேவை அளிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறோம். 'பிராண்ட்'களை உருவாக்குவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தை தாண்டி, 'கிரியேட் இன் இந்தியா'வாக, நாம் மாற வேண்டும்.
தொழில் துறையில் கடந்த ஐந்தாண்டில் எங்கள் மாணவர்கள் பலர், புதிய மாற்றங்களை தொழில் துறையில் கொண்டு வந்துள்ளனர். திரைப்பட வார விழாபோல், வடிவமைப்பு வார விழா நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.