/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி
ADDED : ஜூலை 05, 2024 12:47 AM
சென்னை, சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலில், திட்டமிட்டப்படி வரும், 12ல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவான்மியூரை சேர்ந்த மயூரபுரம் குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச அன்னதான சபையின் தலைவர், டி.சரவணன் தாக்கல் செய்த மனு:
எங்கள் சபை, 1999ல் பதிவு செய்யப்பட்டது. திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் சுவாமிகள் சமாதியில், அன்னதானம் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக எவ்வித தடையின்றி அன்னதானம் வழங்கி வருகிறோம். பாம்பன் சுவாமி என்ற பாம்பன் குமரகுரு தாசர், முருகக்கடவுள் பற்றி, 6,666 பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த 1929 முதல் 1971 வரை, தினசரி பூஜைகள், மதம் சார்ந்த திருவிழாக்களை, மகாதேஜோ மண்டல சபா செய்து வருகிறது. பின், ஸ்ரீ பாம்பன் குமரகுரு சுவாமிகள் சமாதி கோவிலை, அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சித்து பல்வேறு கட்டமாக நடவடிக்கை எடுத்தது.
கோவிலில் பூஜை செய்ய, மேலும் பல சபைகள் உருவாகின. இவற்றை எதிர்த்து, பல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டன.
கோவில் நிர்வாகம் தொடர்பாக உரிமை கோரும் சரியான சபைகளை கண்டறியும் வரை, பூஜை, திருவிழாக்களை அறநிலையத்துறை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவுகளை மீறும் வகையில், அறநிலையத்துறை செயல்பாடு உள்ளது. உண்மையான சபைகளை கண்டறியாமல், பாம்பன் சுவாமிகளின் சமாதியை, கோவில் போல உருவாக்கி, வரும் 12ல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.
அறநிலையத்துறையின் செயல்பாடு சட்ட விரோதமானது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, அவசர கதியில் அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, வரும் 12ல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாம்பன் சுவாமி கோவிலுக்கு திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்தலாம்.
கும்பாபிஷேகத்திற்கு மனுதாரரோ, இதேபோல வழக்கு தொடர்ந்தவர்களோ எந்தவித இடையூறும் தரக்கூடாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் ஒரே மாதிரி தான் கருத வேண்டும்.
முதல் மரியாதை போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது. வழக்கு தொடர்ந்த மனுதாரரும், ஒரு பக்தர் தான். இதை அறநிலையத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை வராதபடி, போலீஸ் பாதுகாப்பை அறநிலையத்துறை பெற்று கொள்ளலாம். மனுதாரர், தன் கோரிக்கை குறித்து அறநிலைய துறையிடம் மனு கொடுக்க வேண்டும்.
அதன்மீது வரும் 24ல் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை கூறலாம்.
மனுதாரர் தரப்புக்கு உரிய வாய்ப்பு தந்து விசாரித்து, ஆறு மாதங்களுக்குள் அறநிலையத்துறை முடிவை அறிவிக்க வேண்டும். கும்பாபிஷேகத்தின் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படக்கூடாது. பிரச்னை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.