/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட போலி போலீஸ் கைது 'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட போலி போலீஸ் கைது
'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட போலி போலீஸ் கைது
'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட போலி போலீஸ் கைது
'டம்மி' துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட போலி போலீஸ் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:47 AM

சென்னை,குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் அசாருதீன், 33. இவர், குரோம்பேட்டை, சி.எல்.சி., சாலையில் மருந்து, மாத்திரை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஜூன் 22ம் தேதி இரவு, கம்பெனியில் இருந்து, 'பைக்'கில் வீட்டிற்கு சென்றார்.
இரவு 11:15 மணியளவில், திருமுடிவாக்கம் பிரதான சாலையில், அடையாறு ஆற்று பாலம் அருகே சென்ற போது, பின்னால் 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்தவர்கள், அசாருதீனை மடக்கியுள்ளனர்.
பின், போலீஸ் எனக் கூறி, காரில் ஏறுமாறு கூறியுள்ளனர். அசாருதீன் மறுத்ததால், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கையில் விலங்கை மாட்டி, அடித்து காரில் ஏற்றியுள்ளனர்.
காரிலும் சரமாரியாக தாக்கி கண்ணைக் கட்டி, சுடுகாடு அருகே இறக்கினர். அசாருதீன் சட்ட விரோதமாக மருந்து விற்பதாக கூறி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிஉள்ளனர்.
பயந்த அவர், 25 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். அவரது மொபைல்போன் வாயிலாக பணம் எடுக்க முயன்றுள்ளனர். அது முடியாததால், பர்சில் இருந்த 9,000 ரூபாய், கிரெடிட், டெபிட் கார்டுகளை பறித்துள்ளனர்.
அன்று இரவு முழுதும் காரிலேயே சுற்றி, மறுநாள் காலை ஆற்காடு பகுதிக்குச் சென்று, அசாருதீன் வங்கி கணக்கில் இருந்து, அந்தோணிராஜ் என்பவர் கணக்கிற்கு, 50,000 ரூபாயை மாற்றியுள்ளனர். பின், அசாருதீனை அங்கேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
அவர் வீட்டிற்கு வந்து வங்கி பரிவர்த்தனையை சோதித்த போது கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலாக, 1.30 லட்சம் மற்றும் 6.10 லட்சம் ரூபாய்க்கு, ஆன்லைனில் பொருட்கள் வாங்கியது தெரிந்தது. பயத்தில் இருந்த அசாருதீன், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
கடந்த 1ம் தேதி, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்ட அதே மர்ம நபர்கள், மீண்டும் 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அசாருதீன், நேற்று முன்தினம், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்படி, போலீஸ் போல நடித்து பணம் பறித்த குன்றத்துாரைச் சேர்ந்த அருண்குமார், 40, பல்லாவரத்தை சேர்ந்த இம்ரான், 27, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கார்மேகம், 38, காஞ்சிபுரம் சதாம், 28, உள்ளிட்ட ஒன்பது பேரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இதில், இம்ரான் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார். அப்போது, அசாருதீன் குரோம்பேட்டை பகுதி மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விற்று அதிகம் சம்பாதிப்பது தெரிந்துள்ளது.
இதனால், அசாருதீனை போலீஸ் போல் நடித்து கடத்தி, பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று ரவுடிகள் கார்மேகம், அருண்குமார் ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி, பணம் பறித்தது விசாரணையில் தெரிந்தது.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரிடம் இருந்து சினிமாவில் பயன்படுத்தும் 'டம்மி' துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைவிலங்கு, மொபைல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.