Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடியில் கழிவுநீர் ஓடையாகும் சாலை நடந்து கூட செல்ல முடியாத அவலம்

ஆவடியில் கழிவுநீர் ஓடையாகும் சாலை நடந்து கூட செல்ல முடியாத அவலம்

ஆவடியில் கழிவுநீர் ஓடையாகும் சாலை நடந்து கூட செல்ல முடியாத அவலம்

ஆவடியில் கழிவுநீர் ஓடையாகும் சாலை நடந்து கூட செல்ல முடியாத அவலம்

ADDED : ஜூன் 24, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 அடி அகல திறந்தவெளி கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டி, 46, 44, 40 மற்றும் 35வது வார்டுகள் வருகின்றன. இப்பகுதிவாசிகள், இந்த கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், விதிமீறி குப்பை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.

இதனால், கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. அந்நேரம் மாநகராட்சி சார்பில், அங்கிருந்து குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால், அவை சாலையிலே கொட்டப்படுகின்றன.

மழை காலங்களில், ஆவடி ஓ.சி.எப்., - எச்.வி.எப்., ஆவடி பேருந்து நிலையம் மற்றும் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் மழை நீருடன், சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவு கலந்து, சேறும் கழிவு சகதியுமாக மாறி அப்பகுதி மக்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது.

மாணவ - மாணவியர், வேலைகளுக்கு செல்வோர் என அனைவரும், அந்த சாலையை கடப்பதே பெரும் போராட்டமாகி விடுகிறது. நேற்று முன்தினம், அவ்வழியே பள்ளிக்கு சென்ற சிறுமி ஒருவர், கழிவுநீர் கலந்த சாலையில் விழுந்து சீருடை நாசமானது.

அதுமட்டுமல்லாமல் சாலையின் உயரம், 1 அடிக்கும் குறைவாக உள்ளதால், மழைக் காலங்களில் மாணவர்கள் கால்வாயில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ல் இந்த கால்வாய் ஓரம் வசிக்கும் இரண்டு குழந்தைகள், அதில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. அதன்பின்னும், ஆவடி மாநகராட்சியின் அலட்சியம் தொடர்கிறது.

மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அள்ளி போடும் குப்பை கழிவை உடனே அப்புறப்படுத்தி, துர்நாற்றம் வீசாமல் இருக்க 'பிளீச்சிங்' பவுடர் தெளிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

கால்வாயில் இருந்து, சாலையோரத்தில் அள்ளி போடும் குப்பை கழிவுகள் காய்ந்த பின் அப்புறப்படுத்தப்படுகின்றன. மழையால் கடந்த சில நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. மாற்று ஏற்பாடு செய்து குப்பை கழிவுகளை உடனே அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்படும்.

மழைக்காலத்தில் கழிவுநீர் வீடுகளில் சேராமல் இருக்க, பழைய கால்வாய் சீரமைப்பது, அதன் அருகில் பாதாள சாக்கடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பேச்சு நடத்தப்பட்டு உள்ளன. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரவி,

வார்டு கவுன்சிலர். ஆவடி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us