/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் ஆக., 30 முதல் செப்., 1 வரை 'பார்முலா 4 ரேஸ்' சென்னையில் ஆக., 30 முதல் செப்., 1 வரை 'பார்முலா 4 ரேஸ்'
சென்னையில் ஆக., 30 முதல் செப்., 1 வரை 'பார்முலா 4 ரேஸ்'
சென்னையில் ஆக., 30 முதல் செப்., 1 வரை 'பார்முலா 4 ரேஸ்'
சென்னையில் ஆக., 30 முதல் செப்., 1 வரை 'பார்முலா 4 ரேஸ்'
ADDED : ஜூலை 30, 2024 12:29 AM

சென்னை, சென்னையில், வரும் ஆக., 30, 31 மற்றும் செப்., 1 ஆகிய தேதிகளில் 'பார்முலா ரேஸிங் சர்க்யூட் எப் 4' எனப்படும், கார் பந்தயம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, தமிழக இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஆர்.பி.பி.எல்., மேலாண் இயக்குனர் அகிலேஷ் ரெட்டி, இந்திய கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டோர், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:
ரேஸிங் புரமோஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், பார்முலா 4 ரேஸ் நடக்க உள்ளது.
முதல் முறை
உலகில் 14 நகரங்களில் மட்டுமே பார்முலா கார் பந்தயம் நடக்கிறது. அதிலும், ஐந்து இடங்களில் மட்டும் தான் இரவு நேர பந்தயம் நடக்கிறது. சென்னையில் அடுத்த மாதம் 30ம் தேதி துவங்கி, செப்., 1ம் தேதி வரை, பார்முலா 4 ரேஸ் நடக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக இரவு நேர பந்தயம், மாநில தலைநகரின் மையப்பகுதியில் நடப்பது இதுவே முதல் முறை. இதில், எட்டு அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச ரேஸ் வீரர்கள் பங்கேற்பர்.
சென்னை தீவுத்திடலில் துவங்கி 3.5 கி.மீ., துாரத்தைக் கடந்து, மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் ரேஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த துாரத்திற்குள், 19 திருப்பங்கள், பல்வேறு இரட்டை வளைவுகள், திடீர் உயரங்கள் உள்ளிட்டவற்றைக் கடந்து, 230 முதல் 250 கி.மீ., வரையிலான வேகத்தில் கார்கள் போட்டியிடும்.
ஆர்.பி.பி.எல்., என்னும் ரேஸிங் புரமோஷன்ஸ் பி.லிட் நிறுவனம், தமிழக விளையாட்டு துறையுடன் இணைந்து, கடந்தாண்டு இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், 'மிக்ஜாம்' புயல் மற்றும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட 30 கோடி ரூபாயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
தற்போது பந்தயத்தை ஆர்.பி.பி.எல்., நிறுவனமே முழுமையாக பொறுப்பேற்று நடத்துகிறது. 'டிவி' ஒளிபரப்பு, விளம்பரங்கள், பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றின் வாயிலாக வருவாயை அந்நிறுவனம் ஈட்டிக் கொள்ளும்.
நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஆக., 1ம் தேதி முதல் 'பேடிஎம் இன்சைடர்' வாயிலாக கிடைக்கும் .
இந்த கார் பந்தயத்தை காண உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வருவர். இதனால், தமிழகத்தின் சுற்றுலா துறை வளரும். மறைமுகமாகவும் பலருக்கு வேலை கிடைக்கும்.
இதன் வாயிலாக, ரேஸ் நடத்தும் இடங்களின் பட்டியலில் சென்னையும் இடம்பெறும். மேலும், இதைக்காணும் ரசிகர்களில் பலர் கார் பந்தய வீரர்களாக மாறவும் வாய்ப்பு உருவாகும். அதே போல, அதிநவீன ரேஸிங் கார்களை, சென்னையிலேயே குறைந்த விலையில் வடிவமைக்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
வாய்ப்பு
ஏற்கனவே, உலக சாம்பியனான மைக்கேல் ஷூமேக்கர் உள்ளிட்டோருடன் போட்டியிட்டு, நம் சென்னை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது, நமக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'பார்முலா-4' கார் பந்தயம் நடைபெறும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போட்டி நடைபெறும் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடிமர சாலைகளில், பார்வையாளர்கள் மற்றும் சாலைகளுக்கு நடுவே கம்பி தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் சாலைகளில், ஆங்காங்கே பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.