/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தென்சென்னையை தக்க வைத்த தி.மு.க., ஏறும் பா.ஜ., செல்வாக்கு; சரிந்தது அ.தி.மு.க., தென்சென்னையை தக்க வைத்த தி.மு.க., ஏறும் பா.ஜ., செல்வாக்கு; சரிந்தது அ.தி.மு.க.,
தென்சென்னையை தக்க வைத்த தி.மு.க., ஏறும் பா.ஜ., செல்வாக்கு; சரிந்தது அ.தி.மு.க.,
தென்சென்னையை தக்க வைத்த தி.மு.க., ஏறும் பா.ஜ., செல்வாக்கு; சரிந்தது அ.தி.மு.க.,
தென்சென்னையை தக்க வைத்த தி.மு.க., ஏறும் பா.ஜ., செல்வாக்கு; சரிந்தது அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 06, 2024 12:23 AM
சென்னை, தென்சென்னை தொகுதியில், 20,23,133 வாக்காளர்கள் உள்ளனர். நடந்த லோக்சபா தேர்தலில், 10,96,026 பேர் ஓட்டளித்தனர். நேற்றுமுன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையின்போது, தி.மு.க.,வை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், 5,16,628 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
பா.ஜ.,வை சேர்ந்த தமிழிசை, 2,90,683 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெயவர்த்தன் 1,72,491 ஓட்டுகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.
இரண்டாவது முறையாக எம்.பி.,யான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, கூடுதலாக மக்கள் நீதி மையம் கட்சி ஆதரவு இருந்தும், 2019ல் கிடைத்த ஓட்டுகளை விட, 48,248 ஓட்டுகள் குறைவாக கிடைத்துள்ளது.
கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 2.50 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலான ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு விழுந்துள்ளது. இதற்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் கை கொடுத்ததாக, தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.
ஜெயவர்த்தன், 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 4.34 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
2019 லோக்சபா தேர்தலில், 3.02 லட்சம் ஓட்டுகளும், 2024 தேர்தலில், 1.72 லட்சம் ஓட்டுகளும் பெற்று தோல்வி அடைந்தார். தென்சென்னை தொகுதியில், அ.தி.மு.க., செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருகிறது.
கோஷ்டி பூசல், மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு பிடிக்காமல் நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு தாவியது உள்ளிட்ட காரணத்தால், இக்கட்சியின் பெரும்பாலான ஓட்டுகள், பா.ஜ., பக்கம் சாய்ந்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில், பா.ஜ.,, 2.58 லட்சம் ஓட்டு பெற்றது. 2019ல், அ.தி.மு.க., கூட்டணியில் நின்றது. இத்தேர்தலில், 2.90 லட்சம் ஓட்டுகள் பெற்று ஏறுமுகமாக உள்ளது. கடந்த 2019ல், மக்கள் நீதி மையத்திற்கு, 1.35 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன.
அக்கட்சி, தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்ததால், அக்கட்சியின் பெரும்பாலான ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. வேளச்சேரி, தி.நகர், மைலாப்பூர் சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.
இந்த வகையில், இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., ஏறுமுகமாக உள்ளது.
நாம் தமிழர்
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், நாம் தமிழர் கட்சி, 50,000 ஓட்டு பெற்றது. இந்த தேர்தலில், 83,972 ஓட்டு பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளது.
2014ம் ஆண்டு தேர்தலில், 20,229 ஓட்டுகள் நோட்டோவுக்கு விழுந்தன. 2019ல் 16,819 ஓட்டுகளாகவும், 2024ல், 15,653 ஓட்டுகளாகவும் நோட்டோவுக்கு ஓட்டு குறைந்துள்ளது.