/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு அரைகுறை பணிகளால் அதிருப்தி பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு அரைகுறை பணிகளால் அதிருப்தி
பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு அரைகுறை பணிகளால் அதிருப்தி
பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு அரைகுறை பணிகளால் அதிருப்தி
பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு அரைகுறை பணிகளால் அதிருப்தி
ADDED : ஜூன் 24, 2024 02:25 AM

வில்லிவாக்கம்:பெருமாள் கோவில் குளத்தில், 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீரமைப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவில் குளத்தின் படிக்கட்டுகள், 2020ல் ஏற்பட்ட பருவ மழையின் போது சேதமடைந்தன.
இதனால், மாசி மாத தெப்ப உற்சவம், கடந்த ஒரு சில ஆண்டுகளாக, நிலை தெப்ப உற்சவமாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இக்கோவிலில் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
சுவாமி மாட விதி வழியாக வந்து, குளத்தை சுற்றி வரும். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். இதனால், பக்தர்கள் விரைவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் பல முறை சுட்டிக்காட்டிய பின், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை சீரமைக்க, கடந்த 2022ல் அறநிலையத்துறையால் 'டெண்டர்' விடப்பட்டது.
ஆனால், பணிகள் துவங்காமல் இருந்ததால், மீண்டும் நம் நாளிதழில் சுட்டிக்காட்டிய பின், கடந்த ஆண்டு ஏப்ரலில் பணிகள் துவங்கின.
தற்போது, ஓராண்டிற்கு மேல் ஆகியும் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, குளத்தில் ஒரு பகுதியில் படிக்கட்டுகள் நான்கு ஆண்டுகளாக உடைந்த நிலையிலேயே உள்ளன.
இதனால், குளத்தில் இறங்க அனுமதிக்காததால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, அரைகுறையாக விடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
குளம் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முதலில், படிக்கட்டுகள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, சிறிய அளவிலான பணிகள் மட்டுமே மீதமுள்ளன.
நீராய்வு மண்டபத்திலும் சிறிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளதால், விரைவில் பணிகள் முழுமையாக நிறைவடையும்.
பருவமழையில் குளம் முழுமையாக நிரம்பினாலும், எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.