/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுமி, சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை சிறுமி, சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை
சிறுமி, சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை
சிறுமி, சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை
சிறுமி, சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை
ADDED : ஜூன் 02, 2025 11:52 PM

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, மூன்று ஆயுள் தண்டனைகள் விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, 13 வயது சிறுவன் ஆகியோர் பெற்றோருடன் வசிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சத்யா, 30, என்பவர், குழந்தைகளின் வீட்டிற்கு சென்று, விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில், 2020 ஆக., 28ம் தேதி, குழந்தைகளின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையில் சத்யா மீது புகார் அளித்தனர்.
அதில், நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறுமிக்கு 7 வயது, சிறுவனுக்கு 9 வயது இருக்கும் போது, சத்யா இருவரையும் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, யாரிடமும் கூறக்கூடாது என, குழந்தைகளை மிரட்டி வந்தார்.
குழந்தைகளை மிரட்டி நிர்வாணமாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அதை வீடியோ எடுத்துள்ளார். இதை குழந்தைகளின் சித்தப்பாவின் நண்பருக்கு 'வாட்ஸாப்'பில் சத்யா பகிர்ந்துள்ளார் என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சத்யாவிற்கு போக்சோ சட்டப் பிரிவில் மூன்று ஆயுள் தண்டனையும், கடத்தலுக்கு 10 ஆண்டுகள், 1,000 ரூபாய் அபராதமும், கொலை மிரட்டலுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கு 5 ஆண்டு சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவனுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சத்யாவை பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.