Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மத்திய அரசு நிலையங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல்:பணப்பட்டுவாடா, மூட்டைகள் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு

மத்திய அரசு நிலையங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல்:பணப்பட்டுவாடா, மூட்டைகள் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு

மத்திய அரசு நிலையங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல்:பணப்பட்டுவாடா, மூட்டைகள் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு

மத்திய அரசு நிலையங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல்:பணப்பட்டுவாடா, மூட்டைகள் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு

UPDATED : ஜூன் 06, 2025 09:02 AMADDED : ஜூன் 06, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில், 20,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா பிரச்னையும் எழுந்தது. இதையடுத்து, மத்திய அரசின் 29 கொள்முதல் நிலையங்களில் தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம் தாலுகா பகுதிகளில், குறைவான அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

பாலாற்றங்கரை பகுதியில் ஏரி பாசனம், ஆழ்துளைக் கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் பயிருக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

இந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்தில், 67,685 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளிடம் இருந்து, 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024- - 25 சம்பா பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக 101 நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு வாயிலாக 39 என, 140 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த ஜன., 22ம் தேதி துவங்கி, மே மாதம் வரை செயல்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்திய 101 நெல் கொள்முதல் நிலையங்களில், 1.50 லட்சம் டன் நெல், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

இதற்கான தொகையான, 378.78 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன் பின், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், சேலம், சென்னை வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு, 30 லட்சம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், தேக்கம் அடைந்தன.

அத்துடன், விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பது தாமதமானது.

இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்களை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்த நிலையங்களில் தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்து வருகிறது.

அதன்படி, கடந்த சில நாட்களாக, மத்திய அரசு நடத்திய 29 கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கும் பணியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.

மற்ற 10 நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், தேக்கம் அடைந்தன. அத்துடன், விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பது தாமதமானது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us