/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரி, சுற்று பகுதிகளில் மின் தடை பிரச்னைக்கு...விமோசனம் : பெருமாட்டுநல்லுாரில் ரூ.34 கோடியில் துணை மின் நிலையம் கூடுவாஞ்சேரி, சுற்று பகுதிகளில் மின் தடை பிரச்னைக்கு...விமோசனம் : பெருமாட்டுநல்லுாரில் ரூ.34 கோடியில் துணை மின் நிலையம்
கூடுவாஞ்சேரி, சுற்று பகுதிகளில் மின் தடை பிரச்னைக்கு...விமோசனம் : பெருமாட்டுநல்லுாரில் ரூ.34 கோடியில் துணை மின் நிலையம்
கூடுவாஞ்சேரி, சுற்று பகுதிகளில் மின் தடை பிரச்னைக்கு...விமோசனம் : பெருமாட்டுநல்லுாரில் ரூ.34 கோடியில் துணை மின் நிலையம்
கூடுவாஞ்சேரி, சுற்று பகுதிகளில் மின் தடை பிரச்னைக்கு...விமோசனம் : பெருமாட்டுநல்லுாரில் ரூ.34 கோடியில் துணை மின் நிலையம்
ADDED : ஜூன் 06, 2025 01:27 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், அடிக்கடி மின் தடை ஏற்படும் பிரச்னைக்கு தீர்வாக, பெருமாட்டுநல்லுாரில், 34 கோடி ரூபாயில், புதிய துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, குமுளி உள்ளிட்ட 12 பகுதிகளில், மின் பிரச்னை இருக்காது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகள் மற்றும் திருப்போரூர், காட்டாங்கொளத்துார் ஒன்றியங்களை உள்ளடக்கிய, 89 ஊராட்சிகளுக்கு, மின்வாரிய தலைமை அலுவலகமாக, மறைமலை நகர் மின் கோட்டம் உள்ளது.
மறைமலை நகர் மின் கோட்டத்தின் கீழ் பொத்தேரி, மறைமலை நகர், படப்பை, ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், மாம்பாக்கம், படூர், ஆலத்துார், திருப்போரூர், நெல்லிக்குப்பம், கண்ணகப்பட்டு ஆகிய இடங்களில், 110/11 கே.வி., துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தவிர, மறைமலை நகர், சிட்கோ, கூடுவாஞ்சேரி, காயரம்பேடு, தைலாவரம், கோவிந்தபுரம், நாவலுார், கேளம்பாக்கம், புதுப்பாக்கம் ஆகிய இடங்களில், 33/11 கே.வி., துணை மின் நிலையங்கள் உள்ளன.
மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 89 ஊராட்சிகளில், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்துடன் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லுாரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் குறைந்த மின்னழுத்தம், மின் தடை என, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கடும் அவதியடைந்து வருகின்றனர். நம் நாளிதழிலும், இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 12 கிராமங்கள், கடந்த மூன்று மாதங்களாக, கடுமையான மின்வெட்டை சந்தித்து வருகின்றன.
இந்த மின்தடை பிரச்னையை நிவர்த்தி செய்ய, கூடுவாஞ்சேரி அல்லது சுற்றுப் பகுதியில், புதிதாக 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், 34 கோடி ரூபாயில், புதிதாக 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க, மின்வாரியம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், இந்த துணை மின் நிலையத்தால், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், அடிக்கடி மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென, பகுதிவாசிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
இப்பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்றும், எதிர்கால தேவை கருதியும், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார், சங்கபாபுரத்தில், புதிதாக 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், 33.67 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த துணை மின் நிலைய பணிகள் விரைவில் துவக்கப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நடப்பாண்டு இறுதிக்குள் துணை மின் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
புதிய துணை மின் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, குமுளி உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு, தடையில்லாத மின் வினியோகம் நடைபெறும். தவிர, மின்னழுத்தமும் சீராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைமலை நகர் மின் கோட்டத்தில் உள்ள 110 கே.வி., துணைமின் நிலையங்கள்
1.பொத்தேரி
2.மறைமலை நகர்
3.படப்பை
4.ஊனமாஞ்சேரி
5.நல்லம்பாக்கம்
6.மாம்பாக்கம்
7.படூர்
8.ஆலத்துார்
9.திருப்போரூர்
10.நெல்லிக்குப்பம்
11.கண்ணகப்பட்டு