Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மக்கள்...எதிர்ப்பு!:உள்ளூருக்கு பற்றாக்குறை வரும் என ஆவேசம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மக்கள்...எதிர்ப்பு!:உள்ளூருக்கு பற்றாக்குறை வரும் என ஆவேசம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மக்கள்...எதிர்ப்பு!:உள்ளூருக்கு பற்றாக்குறை வரும் என ஆவேசம்

கேளம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மக்கள்...எதிர்ப்பு!:உள்ளூருக்கு பற்றாக்குறை வரும் என ஆவேசம்

ADDED : ஜூன் 21, 2024 10:17 PM


Google News
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், உள்ளூர்வாசிகளுக்கு எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் எனக்கூறி, இத்திட்டத்தை கைவிடக்கோரி அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதிக்கு, 25 ஆண்டுகளாக தையூர் ஊராட்சியில் இருந்து, இரண்டு கிணறுகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்தாண்டு 'ஜல் ஜீவன் மிஷன்' கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, தையூர் பகுதியில் மீண்டும் இரு கிணறுகள் தோண்டி, அங்கிருந்து கோவளம் பகுதிக்கு குடிநீர் வழங்க பணி துவக்கப்பட்டது.

இதற்கு தையூர் பகுதிவாசிகள் ஏரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, கிணறு தோண்டும் பணி கைவிடப்பட்டது.

பின், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து, ஏரியில் இயந்திரங்கள் வாயிலாக மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொண்டனர். இதற்கும் அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கேளம்பாக்கம் அ.தி.மு.க., பெண் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா, கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி, 1வது வார்டில் அமைந்துள்ள வண்ணான் ஏரியில், கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நீர் பரிசோதனை செய்ய அதிகாரிகள் வந்தனர்.

பொதுமக்களாலும், ஊராட்சி நிர்வாகத்தாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர் பரிசோதனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

எனினும், இங்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதை, பொதுமக்களாலும், உள்ளாட்சி பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது, இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இத்திட்டத்தால் குடிநீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ''கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது நல்லது தான். எனினும், ஆலோசனை மேற்கொண்டு அதற்கான முடிவு எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us