Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளியாறு அணைக்கட்டு கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு விரைவில் பயனுக்கு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கிளியாறு அணைக்கட்டு கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு விரைவில் பயனுக்கு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கிளியாறு அணைக்கட்டு கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு விரைவில் பயனுக்கு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கிளியாறு அணைக்கட்டு கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு விரைவில் பயனுக்கு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 16, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் செம்பூண்டியில் கிளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாடி கிராமத்தில் துவங்கும் கிளியாற்றிலிருந்து, வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், செம்பூண்டி வழியாக மதுராந்தகம் ஏரிக்கு செல்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கிளியாற்றின் குறுக்கே மண்ணால் அணைக்கட்டு கட்டி, கால்வாய் வழியாக செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.

கிளியாற்றில் அதிகமாக தண்ணீர் சென்று அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால், இப்பகுதியில் அணைக்கட்டு கட்ட வேண்டும். அணைக்கட்டு கட்டினால், ஆண்டுக்கு இரண்டு முறை விவசாய சாகுபடி செய்ய முடியும்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயக் கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து கிராம மக்கள், மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதன்படி நீர்வளத் துறையினர் செம்பூண்டி கிளியாற்றில் கள ஆய்வு செய்து, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தடுப்பணை கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.

இதை பரிசீலனை செய்து, செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு கட்ட நபார்டு திட்டத்தில் 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.

இதன்பின், அணைக்கட்டு கட்டுமான பணி கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கி, ஆற்றில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அணை கட்டுமான பணி துவங்கப்பட்டது.

இது குறித்து, மதுராந்தகம் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில், கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைகிறது.

அணைக்கட்டு நீளம் 115 அடி, உயரம் 6 அடியாக அமைக்கப்படுகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 1,387 கன அடி நீர் வெளியேற்றப்படும்.

செம்பூண்டி, வைப்பணை, லாடக்கரணை, எல்.எண்டத்துார், பசுவங்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். 1,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும்.

செம்பூண்டி கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுமான பணிகளை, ஒன்பது மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அதனால், அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய்கள் துார்வாரப்பட்டுள்ளன.

அதனால், அணைக்கட்டை சுற்றியுள்ள கிராமங்கள், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி, விவசாயம் செய்ய பயன்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us