/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை ஊரப்பாக்கத்தில் மக்கள் அவதி 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை ஊரப்பாக்கத்தில் மக்கள் அவதி
20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை ஊரப்பாக்கத்தில் மக்கள் அவதி
20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை ஊரப்பாக்கத்தில் மக்கள் அவதி
20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை ஊரப்பாக்கத்தில் மக்கள் அவதி
ADDED : ஜூன் 16, 2025 11:45 PM

ஊரப்பாக்கம், ரப்பாக்கம், வைகை நகரில், 650 மீ., துாரமுள்ள வழித்தடத்தில், 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால், அப்பகுதிவாசிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் 15 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 11வது வார்டுக்கு உட்பட்ட வைகை நகர் பிரதான சாலை, 20 ஆண்டாக புனரமைக்கப்படவில்லை.
தார் சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்து தரும்படி, அப்பகுதிவாசிகள் 20 ஆண்டாக கோரிக்கை வைத்தும், புகார் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வைகை நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர். இதன் பிரதான சாலை 650 துாரம் உள்ளது. தவிர, இதன் குறுக்கே 64 மீ., துாரமுள்ள இணைப்பு சாலையும் உள்ளது.
இங்கு, சாலை என்ற பெயரில் வழித்தடம் மட்டுமே உள்ளது. குண்டும் குழியுமான இந்த வழித்தடத்தில் சிறு மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி, வடிய 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.
மேடு பள்ளமாக உள்ள இந்த வழித்தடத்தில், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் பெரும் சிரமத்துடன் பயணிக்கின்றன.
தவிர, முதியோர், குழந்தைகள், பெண்கள் நடக்கவே லாயக்கற்ற நிலையில் வழித்தடம் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது, அடிக்கடி நடக்கிறது.
வைகை நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலையை புனரமைக்கும்படி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்த நிலையில், ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் வந்து, வழித்தடத்தை பார்வையிட்டு சென்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், வைகை நகர் பிரதான சாலை, குறுக்கு சாலை ஆகியவற்றை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.