/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தர்பூசணி சாகுபடியில் செங்கை மாவட்டம் முதலிடம் தர்பூசணி சாகுபடியில் செங்கை மாவட்டம் முதலிடம்
தர்பூசணி சாகுபடியில் செங்கை மாவட்டம் முதலிடம்
தர்பூசணி சாகுபடியில் செங்கை மாவட்டம் முதலிடம்
தர்பூசணி சாகுபடியில் செங்கை மாவட்டம் முதலிடம்
ADDED : ஜூலை 19, 2024 12:32 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவிலும், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தாலுகாக்களில் குறிப்பிட்ட கிராமங்களிலும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
பாலாறு, ஏரிகள், கிணறு, ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி, நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்களும், கத்தரி, மிளகாய், சுரை, தர்பூசணி உள்ளிட்ட காய்கறி செடிகளான தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், பவுஞ்சூர், லத்துார் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், தர்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
புதிய ரகங்கள்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத இறுதியில் பயிரிடப்படும் தர்பூசணி செடிகள், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன.
நாம்நாரி, விஷால், டிராகன், என்.எஸ்., 295 போன்ற மஞ்சள், பச்சை நிற தர்பூசணி ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர். இந்த பழங்கள், சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நல்ல சீசன் காலங்களில், 1 டன் 17,000 - 21,000 ரூபாய் வரை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், சில்லரை விற்பனையில், கிலோ 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மாவட்டம் முழுதும் 5,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்ட தர்பூசணி, இந்த ஆண்டு 17,297 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
புதிய ரகங்கள் வருகையும், தோட்டக்கலைத் துறை வாயிலாக வழங்கப்பட்டு வரும் திட்டங்களுமே, தர்பூசணி உற்பத்தி அதிகரிக்க காரணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் வாயிலாக 150 ஏக்கருக்கும், தமிழக நீர்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டம் வாயிலாக 180 ஏக்கருக்கும், டிராகன், என்.எஸ்., 295 ரக தர்பூசணி விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, 50 சதவீத மானியத்தில், 1,111 ஏக்கர் வயல்களுக்கு நிலப்போர்வை வழங்கப்பட்டுள்ளது. அதே போல, 1,235 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு செய்கின்றன.
முதலிடம்
தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும், 51,830 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாவட்டம், 17,297 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து, தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
விழுப்புரம் இரண்டாவது இடத்திலும், திருவள்ளூர் மூன்றாம் இடத்திலும், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.