/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குற்றச்சம்பவங்களை தடுக்க சாலை துண்டிப்பு சித்தமனுாரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை குற்றச்சம்பவங்களை தடுக்க சாலை துண்டிப்பு சித்தமனுாரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
குற்றச்சம்பவங்களை தடுக்க சாலை துண்டிப்பு சித்தமனுாரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
குற்றச்சம்பவங்களை தடுக்க சாலை துண்டிப்பு சித்தமனுாரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
குற்றச்சம்பவங்களை தடுக்க சாலை துண்டிப்பு சித்தமனுாரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : ஜூன் 07, 2024 11:59 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, அண்ணா சாலை -- சித்தமனுார் செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை, மருதேரி - சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலை.
கருநிலம், கோவிந்தாபுரம், நெல்லிக்குப்பம், கொண்டங்கி உள்ளிட்ட பகுதிவாசிகள், மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் உள்ள காலி இடத்தில், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இவற்றை தடுக்க, இருபுறமும் பள்ளம் தோண்டி, கனரக வாகனங்கள் செல்லாத வகையில் சாலை துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல வழி விடப்பட்டுள்ளது.
தற்போது, இந்த பகுதியில் கழிவு நீர் கொட்டப்படுவது தடுக்கப்பட்டது. ஆனால், பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் எச்சரிக்கை பலகையோ, இரவில் ஒளிரும் விளக்குகளோ இல்லாததால், புதிதாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும், இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க, சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாதபடி பள்ளம் தோண்டுவது எந்த வகையில் சரியாக தீர்வாக இருக்கும் என, மறைமலை நகர் நகராட்சி அதிகாரியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:
சித்தமனுார் சாலையை ஒட்டி, சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள 40 ஏக்கர் நிலத்தில், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளன.
இதில் நுழையும் மர்ம நபர்கள், மது, கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன.
மேலும், லாரிகளில் கழிவு நீர் கொண்டு வந்து கொட்டுவோர் மீதும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்காலிக நடவடிக்கையாக, இந்த சாலையில் கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லாதவாறு பள்ளம் தோண்டி, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையாக, கூடலுார் ஏரிக்கரை சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.