ADDED : ஜூலை 21, 2024 11:24 PM

நியூபோர்ட்: டென்னிஸ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இந்தியாவின் விஜய் அமிர்தராஜ், பயஸ் சேர்க்கப்பட்டனர்.
டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச டென்னிஸ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்படுவர். தற்போது இப்பட்டியலில் இந்திய ஜாம்பவான்களான விஜய் அமிர்தராஜ் 70, லியாண்டர் பயஸ் 51, சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பயஸ், வீரர்கள் பிரிவிலும், விஜய் அமிர்தராஜ், பங்களிப்பாளர் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர்.
ஏழு முறை ஒலிம்பிக்கில் (1992-2016) பங்கேற்ற பயஸ், அட்லாண்டா ஒலிம்பிக் (1996) ஒற்றையரில் வெண்கலம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் 8, கலப்பு இரட்டையரில் 10 என, 18 பட்டம் கைப்பற்றிய இவர், இரு பிரிவிலும் 'கேரியர் கிராண்ட்ஸ்லாம்' வென்றார். ஏ.டி.பி., இரட்டையர் பிரிவில் 55 பட்டம் வென்றுள்ள பயஸ், 37 வாரம் இரட்டையர் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தார்.
ஏ.டி.பி., அரங்கில் 1970ல் அறிமுகமான விஜய் அமிர்தராஜ், இந்தியாவில் டென்னிஸ் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்தார். டேவிஸ் கோப்பை பைனலில் விளையாடி இந்திய அணியில் இரு முறை (1974, 1967) இடம் பெற்றிருந்தார். விம்பிள்டன் (1973, 1981), யு.எஸ்., ஓபன் (1973, 1974) ஒற்றையரில் இரு முறை காலிறுதி வரை சென்றார். ஏ.டி.பி., 'ரேங்கிங்கில்' ஒற்றையரில் 18, இரட்டையரில் 23வது இடம் பிடித்திருந்தார்.
இவர்களுடன், அமெரிக்க வீரர் ரிச்சர்டு ஈவன்சும் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் பங்களிப்பாளர் பிரிவில் சேர்க்கப்பட்டார். இப்பட்டியலில் 28 நாடுகளை சேர்ந்த, 267 ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர்.