Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஓய்வு பெறுகிறார் ஸ்ரீஜேஷ் * ஒலிம்பிக் போட்டிக்கு பின்...

ஓய்வு பெறுகிறார் ஸ்ரீஜேஷ் * ஒலிம்பிக் போட்டிக்கு பின்...

ஓய்வு பெறுகிறார் ஸ்ரீஜேஷ் * ஒலிம்பிக் போட்டிக்கு பின்...

ஓய்வு பெறுகிறார் ஸ்ரீஜேஷ் * ஒலிம்பிக் போட்டிக்கு பின்...

ADDED : ஜூலை 22, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் ஸ்ரீஜேஷ்.

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் 'சீனியர்' ஸ்ரீஜேஷ் 38. கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர். துவக்கத்தில் வாலிபால், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்தினார். பின் ஹாக்கி போட்டிக்கு மாறிய இவர், 2006 தெற்காசிய போட்டியில் அறிமுகம் ஆனார்.

கடந்த 2010ல் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். 2014, 2023ல் ஆசிய விளையாட்டில் தங்கம், 2018 சாம்பியன்ஸ் டிராபியில் தங்கம், 2018 ஆசியாட் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றார்.

இந்திய ஹாக்கியின் 'தடுப்புச்சுவர்' என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுக்குப் பின் பதக்கம் (2021, டோக்கியோ, வெண்கலம்) வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம் பெற்ற இவர், இப்போட்டியுடன் தனது 18 ஆண்டு பயணத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள அவர் கூறியது:

எனது கடைசி தொடருக்காக பாரிசில் தயாராகி வருகிறேன். இந்தியாவுக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடியதை நினைத்துப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இந்தப் பயணம் சாதாரணமானது அல்ல. என் மீது நம்பிக்கை வைத்த தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.

கடினமான, இக்கட்டான நேரங்களில் சக வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். தற்போது பாரிசில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற விரும்புகிறோம். தங்கம் வெல்வதே எங்களது இலக்கு.

இவ்வாறு ஸ்ரீஜேஷ் கூறினார்.

328 போட்டி

சர்வதேச ஹாக்கி அரங்கில் ஸ்ரீஜேஷ் 328 போட்டியில் பங்கேற்றுள்ளார். மூன்று ஒலிம்பிக், பல்வேறு காமன்வெல்த், உலக கோப்பை தொடர்களில் விளையாடினார். 2016ல் இவரது தலைமையில் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியின் வெள்ளி வென்றது.

'கேல் ரத்னா' விருது

இந்திய விளையாட்டின் உயரிய மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது (2021) வென்றுள்ளார்.

* 2021, 2022ல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், சிறந்த கோல் கீப்பராக தேர்வானார்.

சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன

இந்திய ஹாக்கி அணியினர் பாரிஸ் செல்லும் முன், சுவிட்சர்லாந்தில் உள்ள சாகச வீரர் மைக் ஹார்னிடம், மூன்று நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறியது:

நீண்ட பயணத்துக்குப் பின் சுவிட்சர்லாந்தை அடைந்தோம். சிறிது நேரம் துாங்கக் கூட நேரம் தரவில்லை ஹார்ன். அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பி, பனிப்பகுதியில் நடைப் பயணம் செய்தோம். ஒரு குழுவாக எப்படி செயல்படுவது என கற்றுக் கொடுத்தார்.

மறுநாள் சைக்கிளிங் செய்தோம். மலைப்பகுதியில் 20 நிமிடம் கேபிள் காரில் சென்றோம். அங்கிருந்து நடந்து கீழே வந்து சேர்ந்தோம். அதேவேகத்தில் 20 கி.மீ., சைக்கிள் ஓட்டினோம். உணவும் சரியாக இல்லை.

மூன்றாவது நாள் கயிறு உதவியால் குன்றில் இருந்து இறங்கினோம். இந்த பயிற்சிகள் எங்களுக்குள் மறைந்திருந்த திறமை, துணிச்சலை வெளியே கொண்டு வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிகா பத்ரா நம்பிக்கை

ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் முதன் முறையாக இந்திய ஆண், பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கூறுகையில்,''இந்திய அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது மிகப்பெரிய சாதனை. கடந்த ஒலிம்பிக்கில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். மீண்டும் தவறுகள் செய்ய மாட்டேன். தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. பதக்கம் குறித்து துவக்கத்திலேயே நினைக்காமல், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்பேன்,''என்றார்.

ஒலிம்பிக் 'நர்சரி'

தாயாக பங்கேற்கும் வீராங்கனைகளுக்காக, பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் 'நர்சரி' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளை பராமரிக்கலாம். உணவு தயாரிப்பது, 'டயாபர்' மாற்றுவது என குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம்.

படகு வலித்தல் வீராங்கனை மதில்டா உட்பட பிரிட்டனில் இருந்து 8 வீராங்கனைகள் தங்களது குழந்தைகளுடன் பாரிஸ் வந்துள்ளனர். இதில் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை ஆம்பெர், 2 மாத குழந்தையுடன் பங்கேற்கிறார். நியூசிலாந்தின் புரூக் பிரான்சிஸ், லுாசி ஸ்பூர்ஸ் தங்களது 2வயது குழந்தையுடன் படகு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

கிடைக்குமா மல்யுத்த பதக்கம்

கடந்த நான்கு ஒலிம்பிக், மல்யுத்தத்தில் இந்தியா 6 பதக்கம் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றது. இந்திய மல்யுத்த முன்னாள் வீரர் யோகேஷ்வர் தத் (2012ல் வெண்கலம்) கூறுகையில்,'' கடந்த இரு ஆண்டுகளாக மல்யுத்தம் சோதனையான கால கட்டத்தில் இருந்தது. இதனால் மல்யுத்த வளர்ச்சி இந்தியாவில் பாதிக்கப்பட்டது. இம்முறை 5 வீராங்கனை உட்பட 6 பேர் பாரிஸ் சென்றுள்ளனர். இதில் அன்டிம், ரீத்திகா பதக்கம் வெல்வர் என நம்பிக்கை உள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us