/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பாரா நீரஜ்: பயிற்சியாளர் நம்பிக்கைபாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பாரா நீரஜ்: பயிற்சியாளர் நம்பிக்கை
பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பாரா நீரஜ்: பயிற்சியாளர் நம்பிக்கை
பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பாரா நீரஜ்: பயிற்சியாளர் நம்பிக்கை
பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பாரா நீரஜ்: பயிற்சியாளர் நம்பிக்கை
ADDED : ஜூலை 21, 2024 11:45 PM

பாரிஸ்: காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021), தங்கம் (87.58 மீ.,) வென்று வரலாறு படைத்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப்பற்றினார். ஒலிம்பிக், உலக சாம்பியன் என்ற இரட்டை பெருமையுடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்க இருந்தார்.
இந்தச் சூழலில் இவரது தொடையின் தசை பகுதியில் திடீரென காயம் ஏற்பட்டது. இவருக்கு என்ன ஆச்சோ என ரசிகர்கள் அஞ்சினர். காயத்தின் தன்மை அதிகரிக்காமல் இருக்க, சமீபத்திய ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தொடர், பாரிஸ் டைமண்ட் லீக் தொடரில் இருந்து விலகினார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட நீரஜ் சோப்ரா முகத்தில் புன்னகை பூத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26-ஆக.11) தயாராகி வருகிறார். இவருக்கு கிளாஸ் பர்டோனியட்ஸ் (ஜெர்மனி) பயிற்சி அளிக்கிறார்.
இது குறித்து பயிற்சியாளர் கிளாஸ் பர்டோனியட்ஸ் கூறியது:
கடந்த சில மாதங்களாக தொல்லை கொடுத்த தொடை பகுதி காயத்தில் இருந்து மீண்டுவிட்டார் நீரஜ் சோப்ரா. பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. வேகமாக ஓடுவது, குதிப்பது, பளுதுாக்குவது என காலை முதல் மாலை வரை பல்வேறு விதமான பயிற்சியில் ஈடுபடுகிறார்.
வேகம் முக்கியம்: ஈட்டி எறிவதற்கு முன் வேகமாக ஓடி வர வேண்டும். அப்போது தான் அதிக துாரம் எறிய முடியும். மந்தமாக ஓடினால் சாதிப்பது கடினம். இதை மனதில் வைத்து கால்களுக்கு பலம் தரும் பயிற்சி நீரஜ் சோப்ராவுக்கு அளிக்கப்படுகிறது. பாரிஸ் களம் வேகமாக ஓட உதவும். இது நீரஜ் உட்பட அனைத்து வீரர்களுக்கும் சாதகம்.
சாதிக்க தயார்:டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன் 5 தடகள தொடரில் பங்கேற்ற நீரஜ், பாரிஸ் போட்டிக்கு முன் மூன்று தொடரில் தான் கலந்து கொண்டார் என விமர்சிக்கப்படுகிறது. அதிக போட்டிகளில் பங்கேற்பது ஒலிம்பிக் கனவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஈட்டியை எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்வது நல்லதல்ல. போதுமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக சிறந்த முறையில் தயாராகி உள்ளார்.
கணிப்பது கடினம்:ஒலிம்பிக் போட்டி கடினமானது. நீரஜ் பதக்கம் வெல்வார் என்று சொல்லலாம். ஆனாலும், எந்த ஒரு வீரரையும் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என கணிக்க முடியாது. சில நேரங்களில் 88 மீ., துாரம் ஈட்டி எறிந்தால் கூட பதக்கம் கிடைக்காது. சில நேரங்களில் 85 மீ., எறிந்து, பதக்கம் கைப்பற்றலாம். உலகின் 'டாப்' வீரர்கள் களமிறங்குவதால், ஒலிம்பிக் களத்தில் எப்போதும் அனல் பறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
பி.சி.சி.ஐ., ரூ. 8.5 கோடி
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிதி உதவி அளித்துள்ளது.
பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,'ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது நட்சத்திரங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதி உதவி அளிக்கிறோம். நமது குழுவினர் பதக்கம் வென்று சாதிக்க வாழ்த்துகள்,' என தெரிவித்துள்ளார்.