/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா: கிரீஸ் டூ பாரிஸ்பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா: கிரீஸ் டூ பாரிஸ்
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா: கிரீஸ் டூ பாரிஸ்
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா: கிரீஸ் டூ பாரிஸ்
பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா: கிரீஸ் டூ பாரிஸ்
ADDED : ஜூன் 20, 2024 11:16 PM

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஜூலை 26ல் 33வது ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. ஆக. 11ல் நிறைவு பெறுகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் சாதிக்க காத்திருக்கின்றனர். நீண்ட பாரம்பரியமிக்க ஒலிம்பிக் போட்டியின் வரலாற்று நிகழ்வுகளை வரும் நாட்களில் பார்ப்போம்.
பழங்கால ஒலிம்பிக் போட்டி கி.மு. 776 முதல் கி.பி., 393 வரை கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடந்தன. கிரேக்க கடவுள் 'ஜீயசை' கவுரவப்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஆடையில்லாமல் பங்கேற்க வேண்டும், வெறுங்காலில் ஓட வேண்டும், கிரேக்கர்களுக்கு மட்டுமே அனுமதி, போட்டிகளில் பங்கேற்கவோ, பார்க்கவோ பெண்களுக்கு அனுமதி இல்லை என பல கட்டுப்பாடுகள் இருந்தன. கிரேக்க மண்ணில் ரோமானியர்கள் ஆதிக்கம் துவங்கியதும் ஒலிம்பிக் அழியத்துவங்கியது. கி.பி., 393ல் ஒலிம்பிக் போட்டிக்கு ரோமானிய பேரரசர் தியோடாசியஸ் தடை விதித்தார்.
ஒலிம்பிக் தந்தை
ஆயிரத்து 500 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் போட்டிக்கு புத்துயிர் கொடுத்தார் பிரான்ஸ் கல்வியாளர் பியரி டி கோபர்ட்டின். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை 1894ல் நிறுவினார். இவர், நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஒலிம்பிக் பிறந்த கிரீசில் 1896ல் முதலாவது நவீன ஒலிம்பிக்கை நடத்தினார். 1937ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். லாசேன் நகரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது இதயம் ஒலிம்பியாவில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு உயிர் கொடுத்த இவரது இதயம் ஒலிம்பியாவில் புதைக்கப்பட்டது.
எக்ஸ்டிராஸ்
மூன்றாவது முறை
ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் இரண்டாவது நகரமானது பாரிஸ் (1900, 1924, 2024). ஏற்கனவே லண்டனில் (1908, 1948, 2012) மூன்று முறை நடந்தது.
32 வகை
வில்வித்தை, தடகளம், பாட்மின்டன், கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட 32 வகையான விளையாட்டு போட்டிகள் 48 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இம்முறை 'பிரேக்டான்சிங்' போட்டி அறிமுகமாகிறது.