/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உயரம் தாண்டுதலில் உச்சம் தொட தயார் * இந்திய வீரர் சர்வேஷ் உறுதிஉயரம் தாண்டுதலில் உச்சம் தொட தயார் * இந்திய வீரர் சர்வேஷ் உறுதி
உயரம் தாண்டுதலில் உச்சம் தொட தயார் * இந்திய வீரர் சர்வேஷ் உறுதி
உயரம் தாண்டுதலில் உச்சம் தொட தயார் * இந்திய வீரர் சர்வேஷ் உறுதி
உயரம் தாண்டுதலில் உச்சம் தொட தயார் * இந்திய வீரர் சர்வேஷ் உறுதி
ADDED : ஜூலை 24, 2024 11:08 PM

புதுடில்லி: ''ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறுவது தான் முதல் இலக்கு. இதற்கு நீரஜ் சோப்ராவின் 'அட்வைஸ்' கைகொடுக்கும்,'' என சர்வேஷ் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க காத்திருக்கின்றனர். இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் சர்வேஷ் குஷேர் 29, முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் பஞ்ச்குலாவில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 2.25 மீ., தாண்டி, தங்கம் வென்றார். குறைந்தது 2.33 மீ., உயரம் தாண்டினால் தான் ஒலிம்பிக் செல்ல முடியும் என்ற நிலையில், சர்வேஷ் உலக தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றார்.
தற்போது பயிற்சியில் 2.30 மீ., தாண்ட முயற்சித்து வருகிறார். ஒலிம்பிக் பட்டியலில் உள்ள 'டாப்-9' வீரர்கள், கடந்த ஒரு ஆண்டாக குறைந்தபட்சம் 2.33 மீ., உயரம் தாண்டியுள்ளனர். இதனால் சர்வேஷ் பைனலுக்கு செல்ல போராட வேண்டும்.
இதுகுறித்து அவர் கூறியது:
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை சந்தித்தபின், நம்பிக்கை அதிகரித்துள்ளது. 'எதிரணி வீரர்களை பார்த்து பயப்படக்கூடாது, நமது பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,' என்றார். இந்த 'அட்வைஸ்' உதவியாக உள்ளது. தடகளத்தை பொறுத்தவரை நீரஜ் சோப்ரா தான் எனது 'ஹீரோ'. இவர் கொடுத்த நம்பிக்கை காரணமாக, அவரைப் போல நாங்களும் சாதித்து இந்தியாவுக்கு பெருமை தர முயற்சிப்போம்,
இப்போதைய நிலையில் ஆக. 7ல் நடக்கவுள்ள தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு முன்னேற வேண்டும். இது தான் முதற்கட்ட லட்சியம். இதன் பின் அடுத்த கட்ட திட்டத்துக்கு செல்வேன்.
இவ்வாறு சர்வேஷ் கூறினார்.
குழந்தையை பார்க்கவில்லை
சர்வேஷ் கூறுகையில்,'' எனக்கு 9 மாத மகள் உள்ளார். குழந்தை பிறந்த போது, 5 நாள் உடன் இருந்தேன், அவ்வளவு தான். கடைசியாக 2023, நவம்பரில் பார்த்த பின், இன்னும் சந்திக்கவில்லை. ஒலிம்பிக் முடிந்த பிறகு தான் குழந்தையை பார்க்க வேண்டும்,'' என்றார்.
நாளை துவக்கவிழா
பாரிஸ் ஒலிம்பிக், நாளை முறைப்படி கோலாகலமாகத் துவங்குகிறது. துவக்க விழா இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு (ஜூலை 26) நடக்கும். 6 கி.மீ., நீளமுள்ள செய்ன் நதியில் ஒலிம்பிக் நட்சத்திரங்கள் படகில் அழைத்து வரப்படுவர். பின் மைதானத்தை அடைந்ததும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.
கிடைக்குமா வில்வித்தை பதக்கம்
ஒலிம்பிக் வில்வித்தை போட்டி இன்று துவங்குகிறது. பெண்களுக்கான தகுதிச்சுற்று போட்டியில் தீபிகா குமாரி, அன்கிதா, பஜன் கவுர் பங்கேற்கின்றனர். ஆண்கள் பிரிவில் தருண்தீப் ராய், திராஜ், பிரவின் ஜாதவ் களமிறங்குகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில் ஒலிம்பிக் வில்வித்தையில் இதுவரை யாரும் காலிறுதியை தாண்டியது இல்லை.
இம்முறை இந்தியா சாதிக்கலாம். இதுகுறித்து தருண்தீப் ராய் 40, கூறியது:
ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். இதற்கு தகுதி பெறவும், பதக்கம் வெல்லவும் கூடுதல் முயற்சி தேவைப்படும். இது எனது நான்காவது ஒலிம்பிக். இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் கிடையாது என்ற சூழ்நிலையில் உள்ளேன். எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும். முதன் முதலில் பங்கேற்றாலும், இதுதான் கடைசி என்ற நினைப்புடன் வெற்றிக்கு போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸி., வீராங்கனைகளுக்கு கொரோனா
ஆஸ்திரேலிய வாட்டர்போலோ அணியின் ஐந்து வீராங்கனைகள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற அனைத்து ஆஸ்திரேலிய நட்சத்திரங்களுக்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா 'டிரா'
ஒலிம்பிக் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. முதல் போட்டியில் அர்ஜென்டினா, மொரோக்கோ அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. அர்ஜென்டினா அணிக்காக மெடினா 2 கோல் அடித்தார். மொரோக்கோ சார்பில் ராஹிமி சோபியான் 2 கோல் அடித்தார்.
* உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆஸி., வெற்றி
ஆண்களுக்கான ரக்பி 7 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21-14 என சமோவாவை வென்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி 19-12 என கென்யாவை வீழ்த்தியது.