ADDED : ஜூன் 02, 2024 11:15 PM

தைபே: தைவான் ஓபன் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நயனா ஜேம்ஸ் தங்கம் வென்றார்.
தைவானில் சர்வதேச ஓபன் உலக தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நயனா ஜேம்ஸ் பங்கேற்றார். அதிகபட்சமாக 6.43 மீ., தாண்டிய இவர், தங்கத்தை தட்டிச் சென்றார். இது, நடப்பு சீசனில் நயனா வென்ற 4வது பதக்கம். இந்த ஆண்டு இந்திய ஓபன் ஜம்ப்ஸ், பெடரேஷன் கோப்பையில் தங்கம் வென்ற இவர், இந்திய கிராண்ட் பிரிக்ஸ்-1 போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அங்கேஷ் 'தங்கம்'
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 50.63 வினாடியில் கடந்த அங்கேஷ் சவுத்தரி தங்கம் வென்றார். இது நடப்பு சீசனில் இவரது 3வது தங்கம். சமீபத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்-1, பெடரேஷன் கோப்பையில் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் சோம்நாத் சவுகான் (1:51.28) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் இந்தியாவின் தேவ் மீனா (5.10 மீ.,) வெள்ளி வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.