ADDED : ஜூன் 03, 2024 11:11 PM

புதுடில்லி: சர்வதேச செஸ் தரவரிசையில் அர்ஜூன், நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் தரவரிசை பட்டியல் வெளியானது. பிரான்சில் நடக்கும் சர்வதேச தொடரில் தொடர்ந்து நான்கு வெற்றி பெற்ற இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 20, (2771 புள்ளி), நான்கு இடம் முன்னேறி, முதன் முறையாக 'நம்பர்-4' இடம் பிடித்தார்.
'கேண்டிடேட்ஸ்' தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் குகேஷ் (2763) ஒரு இடம் பின்தங்கி, 7வதாக உள்ளார். நார்வே செஸ் தொடரில் உலகின் 'நம்பர்-1' கார்ல்சன் (நார்வே), 'நம்பர்-2' காருணாவை (அமெரிக்கா) வென்ற பிரக்ஞானந்தா, 2755 புள்ளியுடன் 'டாப்-10' பட்டியலில் நுழைந்தார். 5 இடம் முன்னேறிய இவர், 10வது இடத்தில் உள்ளார். இந்திய 'ஜாம்பவான்' ஆனந்த் (2751) 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
நார்வே தொடரில் துவக்கத்தில் சறுக்கிய கார்ல்சன் (2835) 'நம்பர்-1' இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டது. கடைசி இரு சுற்றில் வென்ற இவர் முதலிடத்தை தக்கவைத்தார். நகமுரா (2803), காருணாவை (2798) பின்தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்கள் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (2721) 23வது, ஹரிகிருஷ்ணா (2699) 33வது இடங்களில் உள்ளனர்.