/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகளம்... தடம் பதிக்குமா இந்தியா * பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்புதடகளம்... தடம் பதிக்குமா இந்தியா * பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
தடகளம்... தடம் பதிக்குமா இந்தியா * பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
தடகளம்... தடம் பதிக்குமா இந்தியா * பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
தடகளம்... தடம் பதிக்குமா இந்தியா * பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 23, 2024 11:16 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் 26ல் துவங்குகிறது. இதற்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் 16 பதக்கங்களை பெற போட்டியிட உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (2021, டோக்கியோ) வென்று தந்த இவர், இம்முறை பதக்கம் வெல்வது உறுதி. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற 17 சர்வதேச தொடர்களிலும் சாதித்துள்ளார். இதில் 11ல் தங்கம் வென்றார். 6ல் வெள்ளி கைப்பற்றினார். டோக்கியோவில் 87.58 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்ற பின், நீரஜ் சோப்ரா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். இவரது 'டாப்-10' எறிதலில் அனைத்தும் 88 மீ., துாரத்திற்கு அதிகமாகத் தான் உள்ளது. இதை பாரிசிலும் தொடர்ந்தால் நல்லது.
ஜோதி எப்படி
100 மீ., தடை ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஜோதி. இவரது சிறந்த செயல்பாடு 12.67 வினாடி ஆக உள்ளது. 12.50 வினாடிக்குள் ஓடி வர, பயிற்சியாளர் ஹில்லியர் கைகொடுத்து வருகிறார். ஜோதி, அரையிறுதிக்கு முன்னேறினால் சாதனை தான்.
அவினாஷ் சபில்
சமீபத்திய பாரிஸ் டைமண்டு போட்டியில், 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் அவினாஷ் சபில் தேசிய சாதனை படைத்தார். 8:10 வினாடிக்கும் குறைவாக ஓடினால் பைனலுக்கு முன்னேறலாம்.
பாருல் சவுத்ரி
பெண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ், 5000 மீ., ஓட்டம் என இரு போட்டியில் பங்கேற்கிறார். சமீபத்திய இவரது செயல்பாடுகள் பெரியளவு இல்லாதது ஏமாற்றம்.
ஒலிம்பிக்கில் 'ஹைலைட்' போட்டி 'ரிலே' ஓட்டம். இந்திய ஆண், பெண்கள் அணிகள் களமிறங்குகின்றன. இப்போட்டியில் இந்திய அணி 'கருப்பு குதிரை' என வர்ணிக்கப்படுகிறது. கடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி, கடும் சவால் தந்தது. இது இங்கும் தொடர்ந்தால் பைனலுக்கு செல்வது உறுதி.
தவிர, தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), தஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்) உள்ளிட்டோர் தங்களது முந்தைய சாதனைகளை தகர்த்து சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.
69 பதக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 பேர் பங்கேற்கின்றனர். 16 விளையாட்டுகளில் மொத்தம் 69 பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர்.
* ஒட்டுமொத்தமாக பாரிசில் 32 விளையாட்டுகளில், 329 தங்கம் (157 ஆண், 152 பெண், 20 கலப்பு போட்டி) உட்பட, 1000க்கும் அதிகமான பதக்கம் வழங்கப்பட உள்ளன.
அர்ஜென்டினா-மொராக்கோ மோதல்
பாரிஸ் ஒலிம்பிக் துவக்கவிழா வரும் 26ல் நடக்க உள்ளது. முன்னதாக கால்பந்து, ரக்பி போட்டிகள் இன்று துவங்குகின்றன. முதல் போட்டியில் அர்ஜென்டினா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. தவிர ஸ்பெயின்-உஸ்பெகிஸ்தான், ஜப்பான்-பராகுவே உட்பட கால்பந்தில் 4, ரக்பியில் 6 என மொத்தம் 10 போட்டி இன்று நடக்கின்றன.
ஜூனியர்-சீனியர்
இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு (14 வயது, 2 மாதம்), பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இளம் இந்திய நட்சத்திரம் ஆகிறார். ஆர்த்தி சஹாவுக்கு (11 வயது, ஹெல்சிங்கி, 1952) அடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய இளம் வீராங்கனை ஆனார்.
தவிர, பஜன் கவுர் 18 (வில்வித்தை), ஈஷா சிங் 19 (துப்பாக்கிசுடுதல்) இளம் வயதில் பங்கேற்க உள்ளனர்.
* டென்னிஸ் வீரர் போபண்ணா (44 வயது, 4 மாதம்) பாரிசில் களமிறங்கும் 'சீனியர்' இந்திய நட்சத்திரம் ஆகிறார். துப்பாக்கிசுடுதல் முன்னாள் வீரர் பீம் சிங் பஹதுர் 66, (1976, மான்ட்ரியல்) இந்தியாவின் மூத்த ஒலிம்பிக் நட்சத்திரமாக உள்ளார்.
* சர்வதேச அளவில் சீன 'ஸ்கேட்போர்டு' வீராங்கனை ஜெங் ஹாவோஹாவோ (11 வயது, 11 மாதம்), பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இளவயது நட்சத்திரம் என்ற பெருமை பெறுகிறார். கனடாவின் ஜில் இர்விங் (61 வயது, குதிரையேற்றம்), இங்கு களமிறங்கும் மூத்த நட்சத்திரம் ஆகிறார்.
பாரிஸ் 'ரவுண்ட்-அப்'
* மறக்க முடியாத அனுபவம்
பிரான்சில் 1924ல் ஒலிம்பிக் நடந்தது. தற்போது 100 ஆண்டுக்குப் பின் மீண்டும் இப்போட்டி நடக்கிறது. இதற்காக 45,000 தன்னார்வல உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் தான் ஒலிம்பிக் சிறப்பாக நடக்க உள்ளது. 60 வயது பெண் ஒருவர் கூறுகையில்,''எனது வாழ்நாளில் பாரிசில் மீண்டும் ஒலிம்பிக் நடக்காது என நன்றாக தெரியும். தற்போது இப்போட்டியின் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. டென்னிஸ் வீரர் கார்லஸ் அல்காரசை வரவேற்றது மறக்க முடியாத அனுபவம்,'' என்றார்.
* பஸ் கட்டணம் அதிகம்
ஒலிம்பிக் காரணமாக பாரிஸ் மக்கள் பாடத பாடுபடுகின்றனர். ஏற்கனவே பாதுகாப்பு தொல்லை, தற்போது உள்ளூர் பஸ் கட்டணமும் இரட்டிப்பு ஆகிவிட்டது. ரூ. 227 ஆக இருந்த டிக்கெட் விலை ரூ. 363 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செப். 8ல் பாராலிம்பிக் முடியும் வரை இது தொடருமாம்.
* ஓட்டல் காலி
ஒலிம்பிக் காரணமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பாரிசில் திரள்கின்றனர். ஆனால் இங்குள்ள ஓட்டல்கள் 'புக்' ஆகாமல் காலியாக கிடக்கின்றனர். ரூ. 11,000 மதிப்புள்ள அறையை, பாதி வாடகைக்கு விட்ட போதும் தங்குவதற்கு ஆளில்லை. மறுபக்கம் உள்ளூர்வாசிகள் விரைவில் பணம் பார்க்க, தங்களது இடங்களை வாடகைக்கு விட்டு, வெளியூர் சென்றுள்ளனர்.
* ரூ. 13,625 கோடி
பாரிசின் இதயமாக உள்ளது செய்ன் நதி. இதில் துவக்கவிழா, நீச்சல் மாரத்தான், டிரையாத்லான் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக நதியை சுத்தம் செய்ய மட்டும் ரூ. 13,625 கோடி செலவிட்டுள்ளனர்.