Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோப்பை வென்றது இளம் இந்தியா: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது இளம் இந்தியா: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது இளம் இந்தியா: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது இளம் இந்தியா: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

ADDED : ஜூலை 14, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
ஹராரே: ஐந்தாவது 'டி-20' போட்டியில் சாம்சன் (58 ரன்), முகேஷ் குமார் (4 விக்.,) கைகொடுக்க, இந்திய அணி 42 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 4-1 என கைப்பற்றி, கோப்பையை தட்டிச் சென்றது.

ஜிம்பாப்வே சென்ற இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என கைப்பற்றியது. முக்கியத்துவமில்லாத ஐந்தாவது போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது, ருதுராஜுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட, முகேஷ் குமார், ரியான் பராக் இடம் பெற்றனர்.

சாம்சன் அரைசதம்: இந்திய அணி துவக்கத்தில் திணறியது. சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவரில் இரண்டு சிக்சர் விளாசிய ஜெய்ஸ்வால் (12), 4வது பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா (14), சுப்மன் கில் (13) விரைவில் வெளியேற, 5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 40 ரன் எடுத்து தவித்தது. பின் சஞ்சு சாம்சன், ரியான் பராக் பொறுப்பாக ஆடினர். மவுட்டா ஓவரில் சாம்சன் வரிசையாக இரண்டு சிக்சர் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த நிலையில், பராக் (22) வெளியேறினார். 39 பந்தில் அரைசதம் எட்டிய சாம்சன் (58 ரன், 1 பவுண்டரி, 4 சிக்சர்), முசர்பானி பந்தில் அவுட்டானார்.

ஷிவம் துபே மிரட்டினார். நகராவா ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார். துபே (26), ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் பராஸ் அக்ரம் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரிங்கு சிங் கச்சிதமாக 'பினிஷிங்' செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. ரிங்கு சிங் (11), வாஷிங்டன் சுந்தர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காவது வெற்றி:சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, முகேஷ் குமார் 'வேகத்தில்' அதிர்ந்தது. இவரது பந்துவீச்சில் வெஸ்லி (0), பென்னட் (10) அவுட்டாகினர். வாஷிங்டன் சுந்தர் வலையில் மருமானி (27) சிக்கினார். ஷிவம் துபே பந்தில் மையர்ஸ் (34) வீழ்ந்தார். சிக்கந்தர் ராசா (8) ரன் அவுட்டானார். பராஸ் அக்ரம், 27 ரன் எடுத்தார். மற்றவர்கள் சோபிக்க தவற, ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடர்ந்து நான்காவது வெற்றியை பெற்ற இந்தியா, கோப்பை வென்றது.ஆட்டநாயகனாக ஷிவம் துபே, தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு பந்தில் 13 ரன்

முதல் ஓவரை ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். இது 'நோ-பால்' ஆக அமைய, உதிரி சேர்த்து 7 ரன் கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட இப்பந்தையும் ஜெயஸ்வால் சிக்சருக்கு அனுப்ப, ஒரு பந்தில் 13 ரன்(1+6=7+6) கிடைத்தது.

* சர்வதேச 'டி-20' அரங்கில் முறையாக வீசப்பட்ட முதல் பந்தில், அதிக ரன் (12) எடுத்த முதல் வீரர் என சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். ஐ.சி.சி., முழு உறுப்பினர் அந்தஸ்து பெறாத நாடுகளையும் சேர்த்தால் இரண்டாவது வீரராவார். இதற்கு முன் டான்சானியாவின் இவான் செலிமானி முதலிரண்டு பந்தில் சிக்சர் (எதிர், ருவாண்டா, 2022) அடித்திருந்தார்.

* முதல் பந்தில் அதிக ரன் (13) எடுத்து இந்தியா சாதனை படைத்தது. இதற்கு முன் பாகிஸ்தான் (10 ரன், எதிர் இலங்கை, 2024) எடுத்திருந்தது.

* இங்கிலாந்தின் பில் சால்ட் 'சேஸ்' செய்யும் போது, முதலிரண்டு பந்தில் சிக்சர் (எதிர், ஓமன், 'டி-20' உலக கோப்பை, 2024) அடித்திருந்தார்.

யார் 'டாப்'

இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் (5 போட்டி, 170 ரன்) முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தை ஜெய்ஸ்வால் (3 போட்டி, 141 ரன்) பெற்றார்.

* அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவின் முகேஷ் குமார் (3 போட்டி, 8 விக்.,), வாஷிங்டன் சுந்தர் (5 போட்டி, 8 விக்.,) பகிர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us