/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி இரண்டாவது வெற்றி * சுப்மன் கில் அரைசதம் விளாசல்இந்திய அணி இரண்டாவது வெற்றி * சுப்மன் கில் அரைசதம் விளாசல்
இந்திய அணி இரண்டாவது வெற்றி * சுப்மன் கில் அரைசதம் விளாசல்
இந்திய அணி இரண்டாவது வெற்றி * சுப்மன் கில் அரைசதம் விளாசல்
இந்திய அணி இரண்டாவது வெற்றி * சுப்மன் கில் அரைசதம் விளாசல்
ADDED : ஜூலை 10, 2024 11:05 PM

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 'டி-20' தொடரில் இந்திய அணி, இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் 23 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோற்ற இந்தியா, அடுத்த போட்டியில் வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்தது. நேற்று மூன்றாவது போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சாய் சுதர்சன், முகேஷ் குமார், ரியான் பராக், துருவ் ஜுரல் நீக்கப்பட்டு, ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், கலீக் அகமது சேர்க்கப்பட்டனர்.
சுப்மன் அபாரம்
இந்திய அணிக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது ஜெய்ஸ்வால் (36) அவுட்டானார். அபிஷேக் சர்மா 10 ரன் எடுத்தார். 28 பந்தில் 49 ரன் எடுத்த ருதுராஜ், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுபக்கம் போராடிய சுப்மன் கில், சட்டாரா பந்தில் பவுண்டரி அடித்து, 36வது பந்தில் அரைசதம் கடந்தார். சர்வதேச 'டி-20' ல் இவர் அடித்த இரண்டாவது அரைசதம் இது. 49 பந்தில் 66 ரன் எடுத்த சுப்மன் கில், முஜரபானி 'வேகத்தில்' அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் (12), ரிங்கு சிங் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
மையர்ஸ் ஆறுதல்
ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லே (1), மருமானி (13) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கேப்டன் சிக்கந்தர் ராஜா (15), வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். கேம்பெல் (1) கைவிட, ஜிம்பாப்வே அணி 10 ஓவரில் 60/5 ரன் மட்டும் எடுத்தது.
பின் இணைந்த மையர்ஸ், கிளைவ் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது கிளைவ் (37), வாஷிங்டன் பந்தில் அவுட்டானார்.
பிஷ்னோய் பந்தில் சிக்சர் விளாசிய மையர்ஸ், 45 வது பந்தில் அரைசதம் கடந்தார். சர்வதேச 'டி-20' ல் இவர் அடித்த முதல் அரைசதம் இது ஆனது. கடைசி 10 ஓவரில் 99 ரன் எடுத்த போதும், வெற்றிக்கு போதவில்லை.
ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 159/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மையர்ஸ் (65), வெல்லிங்டன் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
50
கடந்த 2023, டிச.,ல் ராய்ப்பூர் போட்டியில் இந்திய துவக்க ஜோடி (ருதுராஜ்-ஜெய்ஸ்வால்), 50 ரன் எடுத்தது. இதன் பின் 16 போட்டியில் ஒரு முறை கூட துவக்க ஜோடி 50 ரன் எடுக்கவில்லை. ஒரு வழியாக நேற்று சுப்மன், ஜெய்ஸ்வால் இணைந்து முதல் விக்கெட்டுக்கு நேற்று 67 ரன் எடுத்தனர்.
5000
ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஜா, நேற்று 12 ரன் எடுத்த போது, 'டி-20' கிரிக்கெட்டில் 5000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 243 போட்டியில் 5003 ரன் (சர்வதேச அரங்கில் 1983 ரன்) எடுத்துள்ளார்.
* 5000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஜிம்பாப்வே வீரர் ஆனார் சிக்கந்தர். ஹாமில்டன் மசகட்சா (3958) அடுத்து உள்ளார்.