Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/உலக கோப்பை வென்றது இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

உலக கோப்பை வென்றது இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

உலக கோப்பை வென்றது இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

உலக கோப்பை வென்றது இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

ADDED : ஜூன் 30, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சாதுர்யமாக 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

மஹாராஜ் 2 விக்கெட்

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, கோலி அதிரடி துவக்கம் தந்தனர். மார்கோ யான்சென் வீசிய முதல் ஓவரில் கோலி 3 பவுண்டரி அடிக்க, 15 ரன் எடுக்கப்பட்டன. மஹாராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதலிரண்டு பந்தில் 2 பவுண்டரி அடித்தார் ரோகித் சர்மா. 5வது பந்தை 'ஸ்வீப்' செய்தார் ரோகித். பந்து நேராக கிளாசன் கையில் தஞ்சம் அடைய, 9 ரன்னுக்கு வெளியேறினார். 6வது பந்தை சந்தித்த ரிஷாப் பன்ட்டும் அவசரப்பட்டு 'ஸ்வீப் ஷாட்' அடித்தார். பந்து மேலே பறக்க, கீப்பர் குயின்டன் கச்சிதமாக பிடிக்க, 'டக்' அவுட்டானார். இந்திய அணி 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 23 ரன் எடுத்தது. ரபாடா பந்தை தேவையில்லாமல் சூர்யகுமார் (3) துாக்கி அடிக்க, எல்லை பகுதியில் கிளாசன் துடிப்பாக பிடிக்க, தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

அக்சர் படேல் அபாரம்

'ரன் ரேட்டை' உயர்த்த முன்னதாக களமிறக்கப்பட்ட அக்சர் படேல், கோலி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரபாடா பந்தில் அக்சர் ஒரு பவுண்டரி அடித்தார். இந்தியா 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்தது. தொடர்ந்து மார்க்ரம் 'சுழலில்' இரண்டு சிக்சர் விளாசிய அக்சர், நம்பிக்கை தந்தார். தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்'கள் கட்டுக்கோப்பாக பந்துவீச ரன் வேகம் குறைந்தது. இந்தியா 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்னை தொட்டது.

பின் ஷம்சி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார் அக்சர். தொடர்ந்து ரபாடா பந்தையும் அக்சர் படேல் சிக்சருக்கு அனுப்ப, இந்திய அணி 13.1 ஓவரில் 104 ரன்னை எட்டியது. இதே ஓவரின் 3வது பந்தை தட்டி விட்டார் கோலி. மறுமுனையில் இருந்த அக்சர் படேல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பாதி துாரம் ஓடி வந்தார். கோலி மறுக்க, மீண்டும் 'கிரீசிற்கு' மந்தமாக திரும்பினார். அதற்குள் பந்தை 'பீல்டிங்' செய்த கீப்பர் குயின்டன் துல்லியமாக எறிய, 'பெயில்ஸ்' தகர்ந்தன. வெறும் மூன்று 'இன்ச்' இடைவெளியில் 'கிரீசை' எட்ட தவறிய அக்சர் படேல் (47 ரன், 1 பவுண்டரி, 4 சிக்சர்), பரிதாபமாக ரன் அவுட்டானார்.

கோலி அரைசதம்

கடைசி கட்டத்தில் கோலி, ஷிவம் துபே மிரட்டினர். யான்சென் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் துபே. மறுபக்கம் துாணாக நின்று ஆடிய கோலி, 48 பந்தில் இத்தொடரின் முதல் அரைசதம் எட்டினார். ரபாடா ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த கோலி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். யான்சென் ஓவரில்(19வது) ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த கோலி, மீண்டும் பந்தை துாக்கி அடித்தார். இம்முறை ரபாடா பிடிக்க, கோலி 76 ரன்னில் (6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். ஷிவம் துபே 27, ரவிந்திர ஜடேஜா 2, ரன் எடுத்தனர்.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா (5) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் மஹாராஜ், நோர்க்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கிளாசன் கலக்கல்

சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் தடுமாறியது. பும்ரா பந்தில் ஹென்ட்ரிக்ஸ்(4) போல்டானார். மார்க்ரம் (4) நிலைக்கவில்லை. ஸ்டப்ஸ், 31 ரன்னுக்கு அவுட்டாக, 9 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்து தவித்தது. பின் குயின்டன், கிளாசன் சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். குயின்டன் 39 ரன் எடுத்தார்.

அக்சர் ஓவரில் 24 ரன்

போட்டியின் 15வது ஓவரை வீசிய அக்சர் படேல் சொதப்பினார். இதில் கிளாசன் 2 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 24 ரன் எடுக்க, போட்டி தென் ஆப்ரிக்கா வசம் வந்தது. அரைசதம் கடந்த கிளாசன்(52), பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.

மீண்டது இந்தியா

18 வது ஓவரை கலக்கலாக வீசிய பும்ரா, யான்சென்(2) போல்டாக்கினார். 2 ரன் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் 4 ரன் மட்டுமே கொடுக்க, இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசமானது.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசினார். முதல் பந்தை மில்லர் துாக்கி அடித்தார். சூர்யகுமார் எல்லை பகுதியில் அருமையாக பிடிக்க, மில்லர் 21 ரன்னில் அவுட்டாக இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது. 8 ரன் மட்டுமே எடுக்கப்பட, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

அதிக ரன்

'டி-20' உலக கோப்பை பைனலில் அதிக ரன் (176/7) எடுத்த அணியானது இந்தியா. இதற்கு முன், ஆஸ்திரேலிய அணி 173/2 ரன் (எதிர்: நியூசிலாந்து, 2021, இடம்: துபாய்) எடுத்திருந்தது.

மந்தமான அரைசதம்

'டி-20' உலக கோப்பை அரங்கில் மந்தமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் கோலி. முதலிடத்தில் சூர்யகுமார் யாதவ் (49 பந்து, எதிர்: அமெரிக்கா, 2024) உள்ளார்.

கோப்பையுடன் கெய்ல்

போட்டி துவங்கும் முன், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல், பார்படாஸ் பிரதமர் மியா மாட்லேயுடன் இணைந்து 'டி-20' உலக கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.

7 ஓவர், 3 சிக்சர்

இந்திய அணி பேட்டிங்கில், 'பவர் பிளே' முடிந்த பின், அடுத்த 7 ஓவரில் (7 முதல் 13 வரை) 3 சிக்சர் மட்டும் (அக்சர்) அடித்தது. ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இதனால், இந்திய அணியின் ஸ்கோர் உயர வழியில்லாமல் போனது.

76 ரன்

கடந்த 2014, 'டி-20' உலக கோப்பை தொடர் பைனலில் இந்தியாவின் கோலி, 58 பந்தில் 77 ரன் (எதிர்-இலங்கை) எடுத்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் 59 பந்தில் 76 ரன் எடுத்து உதவினார்.

இரண்டாவது முறை

'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் ஆனது. இதற்கு முன் 2007ல் கோப்பை வென்றிருந்தது. இதன்மூலம் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான வரிசையில் முதலிடத்தை இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) பகிர்ந்து கொண்டது.

* இது, ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது கோப்பை. ஏற்கனவே 50 ஓவர் (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007), சாம்பியன்ஸ் டிராபி (2013) வென்றிருந்தது.

ரூ. 20.25 கோடி பரிசு

இந்திய அணிக்கு 'டி-20' உலக கோப்பையுடன், ரூ. 20.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பைனல் வரை வந்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ. 10.50 கோடி அளிக்கப்பட்டது.

அடுத்து 2026ல்

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்து 2026ல் இந்தியா, இலங்கையில் 11வது சீசன் நடக்கவுள்ளன. மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

11 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது

இந்திய அணி ஐ.சி.சி., தொடரில் கடைசியாக 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது. அதன் பின் 2014ல் 'டி-20' உலக கோப்பை பைனல், 2023ல் 50 ஓவர் உலக கோப்பை பைனல், இரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோற்றது. நேற்றைய பைனலில் அசத்திய இந்தியா, 11 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்றது.

தொடரும் சோகம்

கடந்த 1998ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற தென் ஆப்ரிக்கா, 32 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது. இதில் ஏமாற்றிய தென் ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது.

517 சிக்சர்

இம்முறை மொத்தம் 517 சிக்சர் பதிவாகின. இதில் வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 17 சிக்சர் விளாசினார். ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 16, ஆஸ்திரேலியாவின் ஹெட், இந்தியாவின் ரோகித் தலா 15 சிக்சர் பறக்கவிட்டனர்.

961 பவுண்டரி



இம்முறை மொத்தம் 961 பவுண்டரி பதிவாகின. இதில் ஆஸ்திரேலியாவின் ஹெட் அதிகபட்சமாக 26 பவுண்டரி விளாசினார். ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரன் 25, இந்தியாவின் ரோகித் 24 பவுண்டரி விரட்டினர்.

பாண்ட்யா கண்ணீர்

கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். இதில் 8 ரன் மட்டும் விட்டுக் கொடுத்த பாண்ட்யா, இந்தியா உலக கோப்பை வெல்ல உதவினார். இம்மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார்.

75... 76

கோலி இத்தொடர் முழுவதும் பேட்டிங்கில் ஏமாற்றினார். 7 இன்னிங்சில் மொத்தம் 75 ரன் தான் எடுத்தார். நேற்றைய பைனலில் எழுச்சி பெற்ற கோலி, 76 ரன் விளாசி, இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி அவர் வெளியிட்ட செய்தியில்,' இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய பைனல் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, 'டி-20' உலக கோப்பை வென்றுள்ளது. இந்திய அணியால் நாம் பெருமை அடைகிறோம்,' என தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us