/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ உலக கோப்பையை பெற்றுத்தந்த சூர்யகுமாரின் ‛சூப்பர் கேட்ச்' உலக கோப்பையை பெற்றுத்தந்த சூர்யகுமாரின் ‛சூப்பர் கேட்ச்'
உலக கோப்பையை பெற்றுத்தந்த சூர்யகுமாரின் ‛சூப்பர் கேட்ச்'
உலக கோப்பையை பெற்றுத்தந்த சூர்யகுமாரின் ‛சூப்பர் கேட்ச்'
உலக கோப்பையை பெற்றுத்தந்த சூர்யகுமாரின் ‛சூப்பர் கேட்ச்'
ADDED : ஜூன் 30, 2024 10:18 AM

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் கடைசி ஓவரின் முதல் பந்தில் தெ.ஆப்ரிக்காவின் மில்லர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் தான் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. விராத் கோஹ்லியின் அதிரடியில் (76) இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. 177 ரன்கள் இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி வெற்றிப்பெறும் ஒரு கட்டத்தில் வெற்றிப்பெறும் நிலையில் இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 30 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்கள் இருந்தன.
16வது மற்றும் 18வது ஓவர்களை வீசிய பும்ரா முறையே 4, 2 ரன்களே விட்டுக்கொடுத்தார். 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்திய பவுலர்களின் கச்சிதமான பவுலிங்கால் தென் ஆப்ரிக்கா அணிக்கு இறுதிக்கட்டத்தில் நெருக்கடி அதிகரித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யா ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர், பந்தை சிக்சரை நோக்கி விளாசினார்.
சிக்சருக்கு சென்ற பந்தை, பவுண்டரி லைனில் ஓடிவந்தவாரு பிடித்த சூர்யகுமார், அப்படியே சிறிது தடுமாற, லாவகமாக பந்தை மைதானத்துக்கு உள்ளே தூக்கி வீசியதுடன், மீண்டும் வந்து அந்த பந்தை பிடித்து கேட்ச்சாக மாற்றினார். இந்த கேட்ச் தான் ஒட்டுமொத்த ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
மில்லர் வெளியேறியதும் தெ.ஆப்ரிக்காவின் கோப்பை கனவும் தகர்ந்தது. இந்தியாவின் 11 ஆண்டுகால கோப்பை கனவும் பலித்தது. இந்தியா 11 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக டி20 உலகக்கோப்பை வெல்ல சூர்யகுமாரின் கேட்ச் காரணமானது. இது குறித்து புகைப்படங்கள், வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.