ADDED : ஜூலை 18, 2024 11:05 PM

தம்புலா: ஆசிய கோப்பையில் இந்திய பெண்கள் அணி மீண்டும் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 9வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), தாய்லாந்து என 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஜூலை 26) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூலை 28ல் தம்புலாவில் நடக்கும் பைனலில் மோதும்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் நேபாளம், பாகிஸ்தான், யு.ஏ.இ., அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. 'பி' பிரிவில் வங்கதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து அணிகள் உள்ளன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பின், யு.ஏ.இ., (ஜூலை 21), நேபாளத்தை (ஜூலை 23) சந்திக்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை 1-1 என சமன் செய்த உற்சாகத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகொடுக்கலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 8 விக்கெட் சாய்த்த பூஜா 'வேகத்தில்' சாதிக்கலாம். 'சுழலில்' தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல் அசத்தினால் சுலப வெற்றி பெறலாம்.
கடந்த மே மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரை 3-0 எனக் கைப்பற்றிய அனுபவம், நிடா தர் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்கலாம்.
14 முறை
'டி-20' அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் பெண்கள் அணிகள் 14 முறை மோதின. இந்தியா 11, பாகிஸ்தான் 3ல் வென்றன. ஆசிய கோப்பை அரங்கில் ('டி-20') இந்திய அணி விளையாடிய 20 போட்டியில், 17ல் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022ல் நடந்த பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது.