ADDED : ஜூலை 29, 2024 11:36 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் லீக் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் 'எல்' பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி மோதினர். இதில் லக்சயா சென் 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சிக்கலில் லக்சயா: முதல் போட்டியில் லக்சயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானை வீழ்த்தி இருந்தார். ஆனால் இடது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கெவின் கோர்டான் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து இப்போட்டி நீக்கப்பட்டது. 'எல்' பிரிவில் லக்சயா சென், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி தலா ஒரு புள்ளியுடன் உள்ளனர். நாளை நடக்கும் கடைசி போட்டியில் இவர்கள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் 'ரவுண்டு-16' போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெறலாம்.
போட்டி ரத்துபாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்பஸ், மார்வின் சீடல் ஜோடியை சந்திக்க இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஜெர்மனி ஜோடி போட்டி துவங்குவதற்கு முன் விலகியது. இதனையடுத்து இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, காலிறுதிக்கு தகுதி பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
அஷ்வினி ஏமாற்றம்: பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, ஜப்பானின் நமி மட்சுயாமா, சிஹாரு ஷிடா ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய அஷ்வினி-தனிஷா ஜோடி 11-21, 12-21 என தோல்வியடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஜோடி காலிறுதி வாய்ப்பை இழந்தது.
ஹர்மீத் தோல்வி: டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், பிரான்சின் பெலிக்ஸ் பெல்ரன் மோதினர். இதில் ஏமாற்றிய ஹர்மீத் 0-4 (8-11, 8-11, 6-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.