/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சாத்விக்-சிராக் ஜோடி அபாரம்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேற்றம்சாத்விக்-சிராக் ஜோடி அபாரம்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி அபாரம்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி அபாரம்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி அபாரம்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேற்றம்
ADDED : ஜூலை 30, 2024 11:48 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் பஜர் அல்பியன், முகமது ரியான் ஆர்டியன்டோ ஜோடியை சந்தித்தது. இதில் சாத்விக், சிராக் ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, 2 புள்ளிகளுடன் 'சி' பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டன் இரட்டையரில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது.
பெண்கள் இரட்டையர் 'சி' பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யனா மபாசா, அங்கேலா யு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது. ஏற்கனவே முதலிரண்டு போட்டியில் ஏமாற்றிய அஷ்வினி, தனிஷா ஜோடி 'ஹாட்ரிக்' தோல்வியுடன் 'சி' பிரிவில் கடைசி இடம் பிடித்தது.
மணிகா சாதனை:டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 29, பிரான்சின் பிரித்திகா பவடே 19, மோதினர். இதில் அசத்தலாக ஆடிய மணிகா 4-0 (11-9, 11-6, 11-9, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ('ரவுண்டு-16') முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
பால்ராஜ் ஏமாற்றம்:ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு படகு வலித்தல் ('ஸ்கல்ஸ்') காலிறுதியில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் 25, பங்கேற்றார். இலக்கை 7 நிமிடம், 05.10 வினாடியில் கடந்து 5வது இடம் பிடித்த பால்ராஜ் அரையிறுதி வாய்ப்பை இழந்தார். இனி பால்ராஜ், 13-24வது இடத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.