Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

ADDED : மே 25, 2025 04:46 AM


Google News
புதுச்சேரி : நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு, முதல்வர் விளக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய, மாநில அரசுகள் கூடி நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க அமைக்கப்பட்டதே நிடி ஆயோக் அமைப்பு. மத்திய அரசு, மாநில அரசுகளின் கோரிக்கைகளை விவாதித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக இக்கூட்டம் அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பை நமது முதல்வர் கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் புறக்கணிப்பதன் நோக்கம் புரியவில்லை. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, கூட்டணிக்கு தலைமை தாங்கும் பிரதமரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காமல் புறக்கணித்தது ஏன்?

கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றிருந்தால், புதுச்சேரிக்கும் நிதி ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இருக்கலாம். ஜி.எஸ்.டி.,யால் மாநிலத்திற்கு வரவேண்டிய பங்குத்தொகை முறையாக வரவில்லை என்பதையும், மாநிலங்களுக்கு எல்லாம் 42 சதவீதம் ஒன்றிய நிதி அளிக்கும் நிலையில் புதுச்சேரிக்கு 25 சதவீதம் கூட நிதி இல்லாத நிலையையையும் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100 சதவீத நிதியுதவியை கோரி இருக்கலாம். மாநிலத்திற்கு தனிக் கணக்கு தொடங்குவதற்கு முன் வெளிச்சந்தையில் வாங்கிய கடனையும், நீண்ட நாளைய கடன் ரூ. 11.500 கோடியை தள்ளுபடி செய்ய கோரியிருக்கலாம்.

ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாட பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத உள்ஒதுக்கீடு கோரியிருக்கலாம். சட்டசபை கட்டடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், மாநில வளர்ச்சி முடங்கி கிடப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

மத்திய அரசிடம் சட்ட போராட்டம் நடத்தி வரும் தமிழக முதல்வர் கூட இக்கூட்டத்தை புறக்கணிக்காத நிலையில், நமது முதல்வர் கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். இல்லையனில், இக்கூட்டம் தேவையற்றதா? அதனால் எந்த பலனும் இல்லை என்கிறாரா? அல்லது பிரதமரிடம் இதையெல்லாம் விளக்குவதில் நம்பிக்கை இழந்துவிட்டாரா? இதுதான் உண்மை என்றால், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us