Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேச்சுவார்த்தையில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்... சமரசமில்லை; அடுத்து உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

 பேச்சுவார்த்தையில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்... சமரசமில்லை; அடுத்து உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

 பேச்சுவார்த்தையில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்... சமரசமில்லை; அடுத்து உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

 பேச்சுவார்த்தையில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்... சமரசமில்லை; அடுத்து உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்

ADDED : ஜூலை 09, 2024 03:53 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக அதிருப்தியில் போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து சமாதானப்படுத்தினார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை சமதானமாகாத எம்.எல்.ஏ.,க்கள் அடுத்து உள்துறை அமைச்சரை சந்திக்க காய் நகர்த்தி வருகின்றனர்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதையடுத்து என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த போதிலும், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள் செயல்பாடுகளால் தான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தான் முதல்வர் அரவணைக்கிறார். என்.ஆர்.காங்., கூட்டணிக்கான ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் டில்லி சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ்யை சந்தித்து பேசி, முறையிட்டனர். இதற்கிடையில் இப்பிரச்னையை பேசி தீர்க்க பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின்பேரில் பா.ஜ., மேலிட பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டார்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த அவர், காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பா.ஜ., தலைவர் செல்வகணபதி, சபாநாயகர் செல்வம், பா.ஜ., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு சந்தித்து பேசினார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் கலந்துரையாடினார். தொடர்ந்து மதியம் 12.15 மணியளவில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆளும் என். ஆர் காங்., -பா.ஜ., ஆட்சியின் மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். பல துறைகளில் ஊழல் மலிந்துள்ளது. இப்படியே போனால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவு தான் ஏற்படும். எனவே முதல்வரை மாற்ற வேண்டும் என்று முதல் கோரிக்கையை டாப் ஸ்பீடில் முன் வைத்தனர்.

இதனை கேட்ட மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா முகம் மாறியது. அக்கோரிக்கையை உடனடியாக நிராகரித்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் சிலரும் முதல்வர் மாற்றத்தை பற்றி நாம் பேச முடியாது. அது கூட்டணி சம்பந்தப்பட்டது என்று பேச, அத்துடன் முதல்வர் மாற்றம் குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்து தற்போது இருக்கும் பா.ஜ., அமைச்சர்கள் நமது கட்சி எம்.எல்.ஏ.,க்களின் உரிமை பெற்றுதரவில்லை. இவர்களை மாற்றிவிட்டு, சுழற்சி முறையில் மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்.அப்போது தான் புதுச்சேரியில் பா.ஜ.,விற்கு எதிர்காலம் இருக்கும் என்று இரண்டாவது கோரிக்கையை ஒரே பந்தாக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வீசினர்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும். அப்போது தான் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று மூன்றாவது கோரிக்கையை முன் வைத்து கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்திய பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கட்சி மேலிடத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்று இது தொடர்பாக 10 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சமாதானப்படுத்தி இருந்தாலும், அதனை அவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்க திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வருகின்றனர். உள்துறை அமைச்சரை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டுள்ளனர். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us