/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உணவு பாதுகாப்பில் சறுக்கும் புதுச்சேரி சுகாதாரம் உணவு பாதுகாப்பில் சறுக்கும் புதுச்சேரி சுகாதாரம்
உணவு பாதுகாப்பில் சறுக்கும் புதுச்சேரி சுகாதாரம்
உணவு பாதுகாப்பில் சறுக்கும் புதுச்சேரி சுகாதாரம்
உணவு பாதுகாப்பில் சறுக்கும் புதுச்சேரி சுகாதாரம்
ADDED : ஜூலை 28, 2024 07:11 AM
இந்தியாவில் சுற்று லாப் பயணிகள் அதிகம் தேடும் மாநில மாக புதுச்சேரி உள்ளது. ஆண்டுக்கு 17.64 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். இங்கு 8 ஆயிரம் உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளன. ஆனால், உணவு பாதுகாப்பு என்று வரும்போது ரேங்க் பட்டியலில் புதுச்சேரி மிகவும் பின் தங்கியுள்ளது.
ஆண்டுதோறும், தேசிய அளவிலான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு ரேங்க் பட்டியலை ஆராயும்போது, பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடம், சிறிய மாநிலங்களில் கோவா முதலிடம், யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர் முதலிடம் பிடித்துள்ளன.
ஆனால், யூனியன் பிரதேச ரேங்க் பட்டியலில் புதுச்சேரி மாநிலம் 100 மதிப்பெண்ணிற்கு வெறும் 12 மதிப்பெண்களை மட்டுமே பெற்று ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தில் 4 மதிப்பெண்ணுடன் லட்சத்தீவு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உணவின் தரம் சரியில்லை என்பதைவிட உணவு பாதுகாப்பு துறையில் போதிய எண்ணிக்கையிலான ஊழியர்கள், அலுவலர்கள் இல்லை என்பதால் தான் இந்த பின்னடைவை சந்தித்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறையில் 4 நியமன அதிகாரிகள், 9 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என 13 பேர் இருக்க வேண்டும்.
இருந்தபோதும், 2 அதிகாரிகள் மட்டுமே கூடுதல் பொறுப்பாக தற்போது கவனித்து வருகின்றனர். நான்கு பிராந்தியங்களுக்கும் சேர்த்து 2 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.
மாநிலத்தில் 8 ஆயிரம் உணவகங்கள் உள்ள சூழ்நிலையில், 2 அதிகாரிகள் மட்டும் எப்படி உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய முடியும் என, கேள்வி எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக தான், உணவு பாதுகாப்பு ரேங்க் பட்டியலில் புதுச்சேரி மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில உணவு பாதுகாப்பு துறையின் மனித வளத்திற்கு மொத்தமுள்ள 18 மதிப்பெண்ணில் 3 மதிப்பெண்கள் மட்டுமே புதுச்சேரி கிடைத்துள்ளது.
உணவு பாதுகாப்புத் துறையின் முன்னேற்ற வளர்ச்சிக்கு 10 மதிப்பெண்களில் 'பூஜ்யம்' வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு 0.5 மதிப்பெண், இணக்கத்திற்கு 4, உணவு ஆய்வு உட்கட்டமைப்பிற்கு 2.5, நுகர்வோர் அதிகாரத்துக்கு 2 மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது.
இது, மாநில உணவு பாதுகாப்பு துறையின் உட்கட்டமைப்பு மோசமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
சுற்றுலாவுக்கும், உணவு பாதுகாப்புக்கும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருவாயை நம்பியே புதுச்சேரி உள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பான உணவுகளை தருவது முக்கியம்.
எனவே, உடனடியாக உணவு பாதுகாப்பு துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பி, உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும், சுற்றுலாப் பயணிகளின் உணவு பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.