/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வித்துறை சார்பில் உல்லாஸ் கற்றல் மையம் கல்வித்துறை சார்பில் உல்லாஸ் கற்றல் மையம்
கல்வித்துறை சார்பில் உல்லாஸ் கற்றல் மையம்
கல்வித்துறை சார்பில் உல்லாஸ் கற்றல் மையம்
கல்வித்துறை சார்பில் உல்லாஸ் கற்றல் மையம்
ADDED : ஜூலை 18, 2024 11:03 PM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் உல்லாஸ் கற்றல் மையத்தை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
உல்லாஸ் எனும் புதிய பாரத கல்வியறிவுத் திட்டத்தின் கீழ் 15 வயதிற்கு மேல் உள்ள படிக்காதவர்களுக்கு கல்வி அளித்திடவும், புதுச்சேரியை 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சிறுவயதில் பள்ளிப் படிப்பைத் தவறவிட்ட பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து கல்வி கற்கலாம். திட்டத்தின் முதல் கற்றல் மையம் திறப்பு விழா காட்டேரிக்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, உல்லாஸ் கற்றல் மையத்தை திறந்து வைத்து, தன்னார்வல ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையும், கற்போர்களுக்குக் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
மேலும்,நாட்டிலேயே முன்மாதிரியாக உல்லாஸ் பாடத் திட்டத்தை புதுச்சேரி மாநில எழுத்தறிவு மையம் இணையவழிக் கற்றல் பொருட்களாக உருவாக்கியுள்ளது.
விழாவில், இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலர் மோகன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன்,முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திட்டத்தின் நோடல் அலுவலர் சுகுணா சுகிர்தபாய் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளைபள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் மாநில பயிற்சி மையத்தின் விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில், அமைச்சர் நமச்சிவாயம்பேசுகையில், முதியோர் கல்வி திட்டம், அறிவொளி இயக்கம் என்ற திட்டங்கள் இருந்தது.
ஆனால்,தற்போது அந்த திட்டங்கள் இல்லை. வங்கி கணக்கு, பணம் பரிமாற்றம் போன்றவை கூட மொபைல் மூலம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் எல்லோரும் கல்வி அறிவு உடையவர்களாகவும், நாட்டு நடப்பு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய உல்லாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தாண்டு புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் 10 ஆயிரம் பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் அனைத்து விதமான கல்வி அறிவையும் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.