Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - திண்டிவனம் ரயில்பாதை ரூ. 740 கோடியில் திட்டம்

புதுச்சேரி - திண்டிவனம் ரயில்பாதை ரூ. 740 கோடியில் திட்டம்

புதுச்சேரி - திண்டிவனம் ரயில்பாதை ரூ. 740 கோடியில் திட்டம்

புதுச்சேரி - திண்டிவனம் ரயில்பாதை ரூ. 740 கோடியில் திட்டம்

ADDED : ஜூலை 29, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் வழியாக திண்டிவனத்திற்கு ரயில் பாதை அமைக்க, ரூ. 750 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.

புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில் அவர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 2014க்கு பிறகு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு புதுச்சேரிக்கு பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் நடந்து வருகிறது. ரூ. 93 கோடியில் புதுச்சேரி ரயில் நிலையம் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் மற்றும் மாகி பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

காரைக்கால் - பேரளம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் 100 சதவீதம் ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளை மேற்கொண்டுள்ளோம். புதுச்சேரியை இணைக்கும் புதிய ரயில்கள் பரிசீலனையில் உள்ளன.

மோடியை விமர்சிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. வேளாண், சுற்றுலா, கல்வி என, பல துறைகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறைக்கு ரூ. 148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது. புதிய ரயில் சேவைகள் புதுச்சேரியில் இருந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்திற்கு கிடைக்கும் திட்டங்கள் போன்றே புதுச்சேரிக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கியமாக, புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் வழியாக திண்டிவனம் ரயில்பாதை அமைக்க, ரூ. 740 கோடியில் திட்டப்பணிகளை துவங்கியுள்ளோம். இது ஒரு சாத்தியமான திட்டம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஏ.எப்.டி., மில் அருகே ரூ. 75 கோடியில் நான்கு வழி ரயில்வே மேம்பாலம் அமைக்க, வரும் ஆகஸ்ட் 24ல் டெண்டர் விடப்படும். புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் சர்வே பணிகள் நடந்து வருகிறது. முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உடனிருந்தனர்.

புதுச்சேரி வருமா?

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம், புதுச்சேரிக்கு வந்தே-பாரத் ரயில் வருமா என, கேட்டதற்கு, 'வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளன. அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் விவரமும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இரு மாதங்களில் புதுச்சேரி வந்து இரு நாட்கள் தங்கி ஆய்வு செய்வேன்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us