/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுப்பணித் துறை அலுவலகத்தை 'ஜப்தி' செய்ய முயன்றதால் பரபரப்பு பொதுப்பணித் துறை அலுவலகத்தை 'ஜப்தி' செய்ய முயன்றதால் பரபரப்பு
பொதுப்பணித் துறை அலுவலகத்தை 'ஜப்தி' செய்ய முயன்றதால் பரபரப்பு
பொதுப்பணித் துறை அலுவலகத்தை 'ஜப்தி' செய்ய முயன்றதால் பரபரப்பு
பொதுப்பணித் துறை அலுவலகத்தை 'ஜப்தி' செய்ய முயன்றதால் பரபரப்பு
ADDED : ஜூன் 14, 2024 06:20 AM

புதுச்சேரி: நீதிமன்ற உத்தரவின்படி பொதுப்பணித் துறை அலுவலகத்தை கோர்ட் அமினாக்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி அரசு சார்பில், மாகி பிராந்தியத்தில் மாகி ஆற்றங்கரையில் மேம்படுத்தும் வகையில் நடைபாதை கடந்த 2020ல் அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையொட்டி நடைபயிற்சி செல்லவும், அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்கவும் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்பணிகளை ஒப்பந்தம் எடுத்த சென்னையை சேர்ந்த ஐ அண்ட் குவாலிட்டி நிறுவனம் கட்டிக்கொடுத்தது. ஆனால் ஒப்பந்த நிறுவனத்திற்கு 1 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்து 379 ரூபாய் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் கடந்த 2021ல் சமரச நீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு கட்டட ஒப்பந்த நிறுவனத்திற்கான தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், புதுச்சேரி அரசும், பொதுப்பணித் துறையும் அத்தொகையை செட்டில் செய்ய முன்வரவில்லை.
அதையடுத்து ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார், சமரச நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்ற கோரி, கடந்த 2022ல் புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பில் தொகை வழங்காத தலைமை செயலர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகம், கண்காணிப்பு பொறியாளர்-3 அலுவலகத்தில் உள்ள கட்டடம் தவிர்த்த மற்ற அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ஆனால் கோர்ட்டிற்கு கோடை விடுமுறை என்பதால் ஜப்தி செய்யவில்லை.
இதற்கிடையில் நேற்று நீதிமன்ற உத்தரவின்படி, கோர்ட் அமினாக்கள் புதுச்சேரி தலைமை செயலகம், பொதுப்பணித் துறை அலுவலகத்தினை ஜப்தி செய்ய முடிவு செய்தனர். முதலில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் வந்தனர். அவர் ஓய்வு பெற்றுவிட்டதால், அடுத்து பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து தலைமை பொறியாளர் தீனதயாளன் கோர்ட் அமினாக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒப்பந்ததாரரின் பில் கோர்ட்டில் செட்டில் செய்யப்படும்.
ரெட்டியார்பாளையத்தில் விஷ வாயு சம்பவத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதால் அவகாசம் தர வேண்டும் என கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட கோர்ட் அமினாக்கள் புறப்பட்டனர். நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தனர். நேரம் ஆகி விட்டதால் தலைமை செயலகத்தில் அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்படவில்லை.
இவ்வழக்கு இன்று (14ம் தேதி) தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வருகின்றது.