Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலாகா இல்லாத அமைச்சர் காரைக்கால் மக்கள் அதிருப்தி

இலாகா இல்லாத அமைச்சர் காரைக்கால் மக்கள் அதிருப்தி

இலாகா இல்லாத அமைச்சர் காரைக்கால் மக்கள் அதிருப்தி

இலாகா இல்லாத அமைச்சர் காரைக்கால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜூன் 16, 2024 05:44 AM


Google News
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் மொத்தமுள்ள 5 அமைச்சர் பதவிகளில் 3 என்.ஆர்.காங்., கட்சிக்கும், 2 பா.ஜ.,வினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆட்சியின்போதும், காரைக்கால் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது வழக்கம். அதன்படி, முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., சந்திரபிரியங்காவிற்கு, போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சந்திரபிரியங்கா குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து அவரை முதல்வர் ரங்கசாமி நீக்கினார். இதனால், ஒரு அமைச்சர் பதவி காலியானது.

ஒருவழியாக, 5 மாதங்களுக்கு பின், கடந்த மார்ச் 14ம் தேதி, காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.வான திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்து முடிந்தது.

வழக்கமாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படும். ஆனால், அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அடுத்த 2 நாட்களில் மார்ச் 16ம் தேதி, லோக்சபா தேர்தல் தேதி வெளியானது.

தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்ததால், அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஏதும் ஒதுக்க முடியவில்லை. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன், காரைக்காலில் வலம் வருகிறார்.

தேர்தல் முடிவு கடந்த 4ம் தேதி வெளியனதும், தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. அதன் பிறகும், திருமுருகனுக்கு இலாகாக்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. காரைக்கால் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி வழங்கியதை வரவேற்கும் அப்பகுதி மக்கள், இலாகாக்கள் ஏதும் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us