அமித் ஷாவின் ராஜினாமா கேட்கும் திருமா காஷ்மீர் முதல்வரை கேட்காதது ஏன்?: பா.ஜ.,
அமித் ஷாவின் ராஜினாமா கேட்கும் திருமா காஷ்மீர் முதல்வரை கேட்காதது ஏன்?: பா.ஜ.,
அமித் ஷாவின் ராஜினாமா கேட்கும் திருமா காஷ்மீர் முதல்வரை கேட்காதது ஏன்?: பா.ஜ.,
ADDED : ஏப் 25, 2025 01:26 AM

திருப்பூர் : ''காஷ்மீர் சம்பவத்துக்கு அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்; ஆனால், காஷ்மீர் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஏன் யாரும் கூறவில்லை?'' என்று பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் நேற்று அவர் கூறியதாவது: காஷ்மீரில் சுற்றுலா பயணியர் 26 பேர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது தொடர்பான வீடியோக்கள் மனதை உருக்குகின்றன. நடந்த சம்பவத்தை பா.ஜ., கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு பின்னால் யார் இருந்தாலும் எல்லாரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
ஆனால், 'நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்' என திருமாவளவன் கூறி உள்ளார். காஷ்மீரை ஆட்சி செய்கிற முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கூறவில்லை.
![]() |
காஷ்மீரை விடுங்கள், 'இங்கிருக்கும் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷசாராய பலிகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று திருமாவளவன் கூறியிருந்தாரானால், அவர் இன்று பேசுவதில் நியாயம் இருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.
காஷ்மீரில் ஏன் சுற்றுலா பயணியர் தாக்கப்படுகின்றனர்? வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணியர் வரும் அளவுக்கு, காஷ்மீர் வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு, அமைதி திரும்பி உள்ளது. ஆனால், காஷ்மீர் ஒரு கலவர பூமி என உலகத்திற்கு காட்ட வேண்டும் என பாக்., நினைக்கிறது.
அதில் ஈடுபட்ட ஒருவரைக்கூட இனி மத்திய அரசு விட்டு வைக்காது. அது தொடர்பான நல்ல செய்தி நமக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.