Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/சிந்தனைக்களம்: பெங்களூரு கூட்ட நெரிசல் துயரத்துக்கு யார் பொறுப்பு?

சிந்தனைக்களம்: பெங்களூரு கூட்ட நெரிசல் துயரத்துக்கு யார் பொறுப்பு?

சிந்தனைக்களம்: பெங்களூரு கூட்ட நெரிசல் துயரத்துக்கு யார் பொறுப்பு?

சிந்தனைக்களம்: பெங்களூரு கூட்ட நெரிசல் துயரத்துக்கு யார் பொறுப்பு?

UPDATED : ஜூன் 12, 2025 01:29 AMADDED : ஜூன் 12, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
கர்நாடகாவின் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கடந்த 4ம் தேதி ஆர்.சி.பி., கிரிக்கெட் அணியின் ஐ.பி.எல்., கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். இந்த பேரிடர் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான, கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பு என்ற வார்த்தையை மறந்துவிட்டது.

எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, போலீஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களின் குரலாக மாற முயற்சித்தது.

இந்த அரசியல் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், உண்மையில் என்ன நடந்தது? யார் இந்த பெரும் தவறுக்கு காரணம்?முதல்வர் சித்தராமையா இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கவில்லை.

அதற்கு பதில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 10 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் அரசு, போலீசார், ஆர்.சி.பி., அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டி.என்.ஏ., பொழுதுபோக்கு நிறுவனம் ஆகியவற்றுக்கு தொடர்பு உள்ளன.

'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை' என, ஜூன் 5ல் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சிவகுமார் கலந்துகொண்டார். போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றால், இது சட்டவிரோத நிகழ்ச்சி. இதில் துணை முதல்வர் எப்படி பங்கேற்றார்?

ஆர்.சி.பி., அணி வெற்றியை கொண்டாட விரும்புகிறது என்றால் அது புரிந்துகொள்ளக்கூடியது. 17 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பை வென்றுள்ளனர். ஆனால், தனியார் நிறுவனத்துக்காக கிரிக்கெட் விளையாடும் அவர்களை கவுரவப்படுத்த அரசுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

'சின்னசாமி மைதானத்திற்கு வர அனுமதி பாஸ் வேண்டும்' என ஆர்.சி.பி., முதலில் அறிவித்தது. பின் அனுமதி இலவசம் என்றது. இதனால் 35,000 பேருக்கான கொள்ளளவு உடைய மைதானத்திற்குள் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் நுழைய காத்திருந்தனர். இதை போலீஸ் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. போலீசுக்கு அழுத்தம் தந்தது யார்?

இந்த சம்பவத்தால் பீதியடைந்த முதல்வர் சித்தராமையா போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தன் அரசியல் செயலர் கோவிந்தராஜு ஆகியோரை நீக்கினார்.

அரசியல் செயலர்தான் இந்த விஷயத்தில் முதல்வரை வழிநடத்தினார் என்றால், உளவுத்துறை பலவீனமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம். அவர்களையும் துாக்கி அடித்திருக்க வேண்டாமா?

அரசு சார்பில் இந்த சம்பவத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கமிஷனுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, அரசு உண்மையில் தார்மீக, அரசியல் மற்றும் நிர்வாக பொறுப்புகளை சரிசெய்ய விரும்புகிறதா என்பது தெரியவில்லை.

இதுபோன்ற பேரிடர்களில், அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்பு முக்கியமானது. ஆனால், அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல அமைச்சர்கள் யாரும் பதவி விலகவில்லை.

-ஆஷா கிருஷ்ணசுவாமி

சிறப்பு செய்தியாளர், பெங்களூரு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us